கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து தகவல் திரட்டவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை. கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களிடமிருந்து தகவல் பெறும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது.

இதில் ஒட்டுமொத்த மக்களும் உள்ளடங்குகிறார்கள். நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தகவல் தரவு கட்டமைப்பு பேணப்படும். ஆகவே தனிப்பட்ட தகவல் கோரலை நிறுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தகவல் கோரல் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்களை மாத்திரம் இலக்காக கொண்டு தகவல் திரட்டப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொய்யுரைக்கிறார். கடந்த முறையும் இவர் இதே பிரச்சினையை முன்வைத்த போது நான் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தரவுகளை காண்பித்தேன் பதிலளித்தேன்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவு பெற்றுள்ளன. சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இந்த தகவல் பதிவுக்குள் உள்ளடங்குகிறார்கள்.இது தற்போது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை.யுத்த காலத்தில் இருந்து இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்படுகின்றன.பொலிஸ் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஒரு தனிநபர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பான தகவல் தரப்படுத்தலை பேணுவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இதில் தவறொன்றும் இல்லை. பெயர் உள்ளிட்ட தகவல் மாத்திரமே கோரப்படுகிறது. மதம் பற்றி கேட்கவில்லை.இனம் தொடர்பான விபரம் மாத்திரமே கேட்கப்படுகிறது. கடந்த முறையும் இவர் இவ்வாறு பொய்யுரைத்தார்.

நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே தகவல் கோரலை எதற்காகவும் இடைநிறுத்த முடியாது. தகவல் கட்டமைப்பை பேண வேண்டும். சிங்கள மொழியில் மாத்திரம் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். அதை ஆராய்ந்து திருத்திக் கொள்கிறேன் என்றார்.

கொழும்பு துறைமுகத்தில் 553 மில்லியன் டொலர் முதலீடு

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் இன்று (08) அறிவித்துள்ளது.

உயர்தர உள்கட்டமைப்புக்கான நிதியுதவியை வழங்குவதில் னுகுஊ இன் அர்ப்பணிப்பு இந்த புதிய முனையத்தின் மூலம் பிரதிபலிக்கிறது என்று நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியா உட்பட அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கான அமெரிக்காவின் நிலையான அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

அதன்படி, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள ஆழமான நீர் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதற்காக கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 553 டொலர் மில்லியன் நிதியுதவியை அறிவிப்பதற்காக பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஸ்கொட் நாதன் இலங்கை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவை மீள ஆரம்பம்

இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை சனிக்கிழமை (01) ஆரம்பமாகியுள்ளது என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும், இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறினார்.

12 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 என்ற விமானமே இந்தப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.

ஒரு வழிக்கட்டணமாக ரூ.22 ஆயிரம் ரூபாவும் இருவழிக்கட்டணமாக ரூ.41,500 அறவிடப்படும். இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்மூலம், யாழ்ப்பாணம் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும் எனவும் இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ் – இரத்மலானை விமான சேவையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு

இந்தியாவின் விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர் இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம்மற்றும் இரத்மலானை விமான நிலைய செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான அலையன்ஸ் விமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இதன்போது ஆரயப்பட்டன.

அலையன்ஸ் ஏர் இந்தியா குழு இந்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததுடன் மேலும் விமான நிறுவனம் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.