சட்டங்கள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புக்களும் தமிழருக்கு எதிரானதாக வேண்டும் என இனவாதிகள் அதிகாரம் செலுத்துகின்றனர். – மனித  சங்கிலி போராட்டத்தில் நிரோஷ்

தமிழ் மக்களின் உரிமைகளை அடக்குவதற்காக சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக பாரிய மனித உரிமை மீறலை மேற்கொண்ட இலங்கை அரச கட்டமைப்பு தற்போது ஒரு படி மேலே சென்று, தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்கு நேரடியாகவே நீதிபதிகளின் தீர்ப்புச் சுதந்திரத்திலும் கைவைத்துள்ளமை நீதிபதி சரவணராஜாவுடன் அப்பட்டமாக வெளித்தெரிய வந்துள்ளதாக ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக மருதனார்மடம் முதல் யாழ்நகர் வரை பேரணியின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்காக தமிழ் மக்கள் இந்தளவு தூரம் போராடுகின்றனர் என்பதில் இருந்து எம்மிடத்தில் காணப்படும் ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசு நீதித்துறையின் சுதந்திரத்தினை மீறி ஏனும் தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால், இலங்கை அரச கட்டமைப்பு பயங்கரவாதச் சட்டம், அவரகாலச்சட்டம், தற்போது கொண்டுவரப்படவுள்ள சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் பிற்போக்கானதும் இனவாத நோக்கத்தினை நிறைவேற்றக்கூடிதுமான தொல்லியல் சட்டங்கள் என எமக்கு எதிராக பல சட்டங்களை பிரயோகிக்கித்துவருகின்றது. பாராளுமன்றில் காணப்படும் இனவாத பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டு எண்ணிக்கையில் குறைவானதேசிய இனங்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை இயற்றி அவற்றை நீதிமனங்களின் வாயிலாக எம்மீது  அரச கட்டமைப்பு பிரயோகித்தது. இவ்வாறான சட்டங்களினால் தமிழ் மக்கள் சொல்லெணாத் துன்பங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் உள்ள சட்டங்கள் மாத்திரமல்ல நீதிமன்றத்தின் தீர்ப்புக்களும் சிங்கள பேரினவாத கட்டமைப்பிற்கு சாதகமாகக் கணப்பட வேண்டும் என்று தான் அரசும் சிங்கள பேரினவாதிகளும் அதற்காக உச்ச அதிகாரத்தை பிரயோகிக்கின்றார்கள்.

தற்போது தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்காக குருந்தூர்மலை போன்ற இடங்களில் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்களை தொல்லியல் திணைக்களம்  உள்ளிட்ட அரச திணைக்களங்கள்; அவமதித்துள்ளன.  பேரினவாத சிந்தனைகளின் அடிப்படையில் நீதிபதிகளை அச்சுறுத்தி தீர்ப்பினை அவமதிக்கின்றனர். நீதித்துறையை அவமதிக்கின்னர். இந்த நாட்டை ஏனைய இனங்கள் வாழ முடியாத தனிச்சிங்கள பௌத்த இனவாத தேசமாகக் கட்டியெழுப்பவே இவை அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எந்த nருக்கடிக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உள்நாட்டுப்பொறிமுறை தீர்வாகது என்பது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டுள்ளது என ரொலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி

இன்றைய மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலைக் கண்டித்தும் இலங்கைத் தமிழர்களுக்கு உள்நாட்டு சட்டங்களுக்கமைய நீதி கிடைக்காது என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கும் இலங்கையில் மீண்டும் ஒரு இன அழிப்பு நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று (04) புதன் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை மருதனார்மடம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் எமது குறுகிய கால அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

இன்றைய போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறுபட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் குருந்தூர்மலை சைவத் தமிழர்களுக்குச் சொந்தமானது என்று வழக்காடிய உறவுகளும் கலந்துகொண்டனர் என்பதுடன் அவர்கள் நீதிபதிக்கு எத்தகைய அழுத்தங்கள் இருந்தன என்பதையும் தெளிவாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்த கருத்துகள் சர்வதேச சமூகத்தின் செவிகளுக்குச் சென்றிருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இருக்கின்ற குறுகிய ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய இனத்திற்கு இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீதி கிடைக்காது என்பதை நாம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்த வேண்டிய அவசியம் தமிழர் தரப்பிற்கு இருக்கின்றது. தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய இருக்கின்றோம்.

எமது தொடர்ச்சியான போராட்டங்களே எமக்கான நீதியையும் நியாயத்தையும் எமது வாழ்வுரிமையையும் நிலைநாட்ட வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கட்சி அரசியலைப் புறந்தள்ளி எத்தகைய முரண்பாடுகளையும் ஒதுக்கிவைத்து, எமது இனத்தின் இருப்பிற்காக அனைவரும் தொடர்ந்து இணைந்து செயற்பட அறைகூவல் விடுக்கின்றோம்.

போராட்டத்தில் கலந்துகொண்ட சகலருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது கொக்குவில் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டோர், நீதி தேவதையின் உருவ சிலைக்கு கறுத்த துணி கட்டி, நீதி தேவதையின் கையில் உள்ள தராசு ஒரு பக்கமாக தாழ்ந்து இருக்க கூடியவாறு, நீதி தேவதையின் உருவ சிலையை காட்சி படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

பின்னர் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள் என போராட்டத்தில் கலந்து கொண்டோர் நீதி தேவதையின் உருவ சிலைக்கு முன் மண்டியிட்டு, நீதி கோரினர்.

யாழ்ப்பாண நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக முடங்கின

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் 2 நாட்கள் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி யாழ் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் (3,4) சட்டத்தரணிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்று முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்வர்.

மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பு

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகனினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் , மழையையும் பொருட்படுத்தாது , நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் இடம்பெற்றது.

அந்தவகையில் மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளதோடு எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழாவும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடியேற்ற திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அங்கப்பிரதட்சணம் உட்பட பல்வேறு நேர்த்திகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 21 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம் பெறவுள்ளன.

இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

ஆலய சூழலில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலய வீதியை சுற்றி சிவப்பு வெள்ளை கொடிகள் ஆலயத்தினரால் கட்டப்பட்டு வருகின்றன. கொடிகள் கட்டப்பட்டு எல்லைப்படுத்தப்படும் ஆலய சூழலில் வியாபார நடவடிக்கைகள், யாசகம் பெறல், விளம்பர நடவடிக்கைகள் என்பவை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு வருவோர் அப்பிரதேசத்திற்குள் காலணிகளுடன் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புத்தூரில் குமரகுருபரன் விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது

புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் விளையாட்டரங்க திறப்புவிழா நேற்று புதன்கிழமை (09.08.2023) மலை குமரகுருபரன் மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது.

ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் நிதிப் பங்களிப்பு முயற்சியின் வாயிலாகக் காணி கொள்வனவு செய்யப்பட்டு அக்காணியில் கந்தர் ஐயாத்துரை மற்றும் ஐயாத்துரை அன்னப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக இவ் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு அவை உத்தியோகபூர்வமாக சன சமூகநிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் விருந்தினர் வரிசையில் – பிரதம விருந்தினராக ஓய்வுநிலை வைத்திய அதிகாரி திருமதி இரவீந்திர வசந்தமாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபர் சின்னத்தம்பி திரிகரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்,வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ், யாழ் போதனா வைத்தியசலையின் வைத்திய கலாநிதி இராசரத்தினம் துஷிந்தன், பொது சுகாதார பரிசோதகர் அனுதர்சன் ஆகியோரும் புலம்பெயர் உறவுகளில் இருந்து புத்தூர் குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளை சார்பாக அதன் தலைவர் செல்லப்பா சிவராஜா மற்றும் நிர்வாகக் குழுசார்பாக செல்லையா சோதிநாதன், இராதுரை சிவாசம்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சனசமூக நிலையத்தின் புதிய விளையாட்டரங்கில் கலை நிகழ்வுகள் மைதான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் யானைகளைப் பயன்படுத்த அனுமதி பெறப்பட வேண்டும் – யாழ் மாவட்ட அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது வேறுமாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய சடங்குகளிலும் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துகின்றனர்.

இதன்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதும் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமான ஆபத்துகளை விளைவிக்க கூடியதாகும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு யானைகளை பயன்படுத்தவதற்கான அனுமதி வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் யானைகளை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதற்கான ஆளணி ஆகியவை பேராதனை கால்நடை வைத்திய பீடத்தில் மட்டுமே உள்ளதுடன் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் தொழில் பரப்பினுள் அவற்றுக்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு உரிய அனுமதி பெறப்படாமலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது யானைகளை உற்சவங்களில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உற்சவங்களை நடாத்துவோரை கேட்டுக்கொள்வதாக அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் அறிவிப்பினை விடுத்துள்ளார்.