நாணய நிதியத்தின் கடனுதவி குறித்து உன்னிப்பாக அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி

இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி தொடர்பில் கண்காணித்துவருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுக்குழுவின் தலைவர் கிரேஸ் ஆசீர்வாதம் ஆகியோருக்கு இடையில் லக்ஸம்பேர்க்கில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கிரேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஏற்றுமதியை மையப்படுத்திய போட்டித்தன்மைவாய்ந்தும், சூழலுக்கு நேயமானதும், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு கொள்கை தொடர்பிலும் அவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி குறித்தும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் 50 மில்லியன் யூரோ நிதியுதவியில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கழிவுநீர் முகாமைத்துவ செயற்திட்டம் குறித்து பிரஸ்தாபித்துள்ள கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றவுடன் இலங்கையில் பசுமை செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவது குறித்துத் தம்மால் பரிசீலனை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன்நெருக்கடிக்கு உடனடி தீர்வினை காண நடவடிக்கை; ஜி-20 நாடுகளின் நிதிசார் மாநாட்டில் இணக்கம் !

இலங்கையின் கடன் நெருக்கடிநிலைக்கு உடனடியாகத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி செயற்படத்தயாராக இருப்பதாக ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூர் நகரில் கடந்த 24 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவுதல், அதனை முன்னிறுத்தி கடன்வழங்குனர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டின் பெறுபேறு குறித்த ஆவணம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வாசிக்கப்பட்டது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குரிய தீர்வை அனைவரும் ஒருங்கிணைந்து பெற்றுக்கொடுப்பதற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் கூட்டாக இணைந்து பல்தரப்பு ஒருங்கிணைவை வலுப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன் இரத்திற்கு அப்பால் கடன்நெருக்கடியைக் கையாள்வதற்கான பொதுச்செயற்திட்டத்தை உருவாக்கல்’ என்ற அடிப்படையின்கீழ் உருவாக்கப்பட்ட அனைத்துக் கடப்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று அந்தப் பொதுச்செயற்திட்டத்தை உரியவாறான காலப்பகுதியில், முன்னெதிர்வுகூறக்கூடிய அடிப்படையில், ஒருங்கிணைந்த முறையில் அமுல்படுத்தவேண்டும்’ என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கடன் மறுசீரமைப்பு தீர்மானம் மார்ச் 31 இனுள் அறிவிக்கப்படும்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் அறிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இரண்டு வருட கால அவகாசம் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் கடன் நிலைபேறான தன்மையை அடைந்ததும் அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாரிஸ் கிளப் முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தியாவின் நிபந்தனைகளுக்கு பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டாலும், அதை ஏற்க மறுத்த சீனா, தனது சொந்த நிபந்தனைகளை முன்வைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாளை பெங்களூரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்துரையாடலில் பொருளாதார வீழ்ச்சியடைந்த நாடுகளுக்கு உதவுவது குறித்து ஆராயப்படவுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து சீன நிதியமைச்சருடன் கலந்துரையாட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்காவிடின் எரிபொருள், மின்வெட்டு என பொது மக்கள் பாரிய சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையின் கட்டத்தில் இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது – சரத் வீரசேகர

கடுமையான நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது என சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வங்குரோத்து நிலை ஏற்பட்டபோது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தபட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறம் அதுவரை முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்ததா என்பதை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்குத் தயார் என பத்திரப்பதிவுதாரர்கள் நாணய நிதியத்துக்கு அறிவிப்பு

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை இலங்கை பத்திரதாரர்களின் குழு ஏற்றுகொண்டுள்ளது.

அத்தகைய ஈடுபாட்டின் விளைவாக, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் பங்களிப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில், இந்திய அரசாங்கம், 2023 ஜனவரி 16 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக தெரிவித்திருப்பதையும் பத்திரதாரர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோன்று, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் மற்றும் சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கு நாடு மீண்டும் அணுகலை வழங்கவும், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி தயாராக இருப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்க தயார் – பாரிஸ் கிளப்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை இலங்கை வழங்க பாரிஸ் கிளப் (Paris Club) தயாராகவுள்ளது.

பெரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, கடன் மறுசீரமைப்பில் “விரைவில்” தமது ஆதரவை பாரிஸ் கிளப் அறிவிக்க உள்ளதாக விடயத்துடன் தொடர்புடைய ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் இலங்கை, கடந்த செப்டம்பரில் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

எனினும், இந்த நிதி திட்டத்தை பெருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் ஒப்புதல் பெறுவது அவசியம்.

அந்த ஒப்புதலை பெற, முக்கிய இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தை பெற வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் கிளப்பின் உறுப்பினர் அல்லாத சீனாவும் இந்தியாவும், இலங்கைக்கான இருதரப்பு கடன் வழங்குநர்களில் முன்னணியில் உள்ளனர்.

எவ்வாறாயினும், அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க உதவுவதற்கு முன்வந்த இந்தியா, அதற்கான நிதியியல் உத்தரவாதங்களை அளித்தது.

மேலும் சீனாவின் எக்ஸிம் வங்கி கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில், இரண்டு வருட கடன் ரத்து கால அவகாசத்தை வழங்கியது.

சீனாவின் இந்த உறுதிமொழிகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.

எவ்வாறாயினும், பெய்ஜிங் போதுமானதைச் செய்யவில்லை என்று கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

“சீனா இதுவரை வழங்கியது உத்தரவாதம் போதாது. அவர்கள் IMF கடன் நிவாரணத்தை பெற நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதங்களை நாம் எதிர்பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியத்தின் மிகப்பெரிய அங்கத்தவர்களின் ஒருவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி நேரடிப் பேச்சு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இதன்படி 10 வருடங்களுக்கு கடன் தடைக் காலத்தையும், 15 வருட மறுசீரமைப்பையும் வழங்க இந்தியா உடன்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜப்பான் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு பாரிஸ் கிளப் மூலம் ஆதரவை தெரிவித்தது.

எனினும் சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் அடிப்படையில் இரண்டு வருட கடன் தடையை வழங்க முடியும் என்றும் இலங்கையின் நிதியமைச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

எனினும், இலங்கை தொடர்பான திட்டத்தைத் தொடர்வதற்கு சீனாவின் முன்மொழிவு போதுமானதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் இருக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவை நீடிக்கும் அறிக்கையை பாரிஸ் கிளப் இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் கிளப், இலங்கைக்கு 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 வருட கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிந்துள்ளது.

இது நாட்டின் நிதி சிக்கல்களை ஒழுங்கமைக்க போதுமான நேரத்தை வழங்கும்.

ஆதாரத்தின்படி, சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற பரிஸ் கிளப்பிற்கு வெளியே உள்ள பல நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளை நிறைவுசெய்யும் என நம்புவதாக வெளிநாட்டு ஊடக மொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

பொருளாதார மறுமலர்ச்சிக்கான மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் வியாழக்கிழமை (ஜன 26) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான செயன்முறைகள் நிறைவடையும் எனவும் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஏற்றுமதிக்கான விவசாய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது பிரதமரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடனை மறுசீரமைக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் திட்டங்களை உருவாக்கும் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கான ஒரு பாதுகாப்பு வலயம் அவசியமென கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஆகக் குறைந்த்து அரச துறையில் ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், பலர் தங்கள் வருமான மார்க்கங்ளை இழந்துள்ளதால், பொதுத்துறையினர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாரான மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிச்சந்திர மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் துறைப் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி வி. டி. விக்கிரமாராச்சி அவர்களும் இந்த  கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.