கிறிஸ்தவ மதகுருமார்களின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுகின்றன; அவுஸ்திரேலியாவின் உதவியைக் கோரும் கர்தினால்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கான சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா உதவவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏபிசிக்கு கர்தினால் இதனை தெரிவித்துள்ளார்.

270பேருக்கும் என்ன நடந்தது அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிவதற்காக சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களை கொடுப்பதற்கு அவுஸ்திரேலியாவும் உதவவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை பாரிய மனித உரிமை மீறலாக மனிதர்களின் கௌரவம் மீறப்பட்ட செயலாக அரசியல் சதி குறித்த சந்தேகம் உள்ள விடயமாக அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஏனைய அரசாங்கமும் கருதவேண்டும் என கர்தினால் தெரிவித்துள்ளார்.

முக்கிய நபர்கள் அமைச்சர்கள் உளவுத்துறையில் உள்ளவர்கள் யுத்தகாலத்திலும் அதன் பின்னரும் நிலவிய வன்முறை பாரிய குழப்பநிலை காணாமல்போதல்கள் படுகொலைகள் போன்வற்றுடன் தொடர்புபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள கர்தினால் இதன் காரணமாகவே நாங்கள் சுயாதீனமான சுதந்திரமான அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படாத சர்வதேச தராதரங்களை பின்பற்றுகின்ற விசாரணைகளை கோருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குகுதல் குறித்து கேள்வி எழுப்பியமைக்காக சுரேஸ்சாலேயை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் எனது மதகுருஒருவருக்கு எதிராக வழக்குதாக்கல்செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள கர்தினல் மல்கம் ரஞ்சித் இந்த தாக்குதல் உயர்மட்டத்தில் உள்ள குழுவொன்றின் தாக்குதல் போல தென்படுகின்றது என குறிப்பிட்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஏனையகிறிஸ்தவ மதகுருமார்களை கண்காணிக்கின்றனர் என்னை பற்றியும் ஏனைய கிறிஸ்தவமதகுருமார்கள் குறித்தும் பல ஆவணங்களை கைவசம் வைத்திருக்கின்றனர் இது குறித்து நான் உறுதியாக சொல்கின்றேன் எங்கள் தொலைபேசிகள் பாதுகாப்பாக இல்லை நாங்கள் சுதந்திரமாக பேசமுடியாத நிலையில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பாலம் கட்டுவதெனில் சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கர்தினால்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமானால் சர்வசன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை பெற வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால், வரலாற்று காலம் தொடக்கம் நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை அந்நியர்களுக்கு காட்டிக்கொடுத்து வருகின்றனர் என்பதை வலியுறுத்தினர்.

மேலும் கருத்து தெரிவித்த கர்தினால்,

“”நாங்கள் எங்கள் நாட்டின் துண்டுகளை வெவ்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்கிறோம்.

ஒரு சக்திக்கு அடிபணிந்து பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து இந்த நாட்டை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆட்கள் இந்தியாவிற்கு பாலம் கட்டுகிறார்கள். இப்போது இந்தியாவில் இருந்து நமக்கு என்ன பிரச்சனைகள்? ஒருமுறை பருப்பு கொண்டு வந்தது நினைவிருக்கிறதா.

இலங்கைக்கு இராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களின் கருத்தின் அடிப்படையில் சில விஷயங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது.

அவர்களை எங்கள் தோளில் ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னொரு பாலம் கட்டினால் நன்றாக இருக்கும். இந்த முட்டாள்தனமான கதைகளை யார் சொல்வது?

நமது நாடு எப்போதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது. நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமையாக இருந்ததில்லை. வேறொரு நாட்டிலிருந்து பிரிந்து செல்லவில்லை. அன்று முதல் இலங்கை தனி நாடாக இருந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தங்களை இந்நாட்டு மன்னர்கள் கையாண்டார்கள், ஆனால் நாம் யாரையும் அடிமைப்படுத்தவில்லை.

நம் நாட்டை அந்நிய தேசம் கைப்பற்றியிருந்தால், அன்பு சகோதர சகோதரிகளே, நமது தலைவர்களின் துரோகத்தாலேயே அது நடந்நதது. நாளையும் இதே நிலை ஏற்படலாம். இந்த பாலம் கட்டும் யோசனைக்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும். பொதுமக்கள் கருத்து இல்லாமல் இவற்றைச் செய்வது தவறு.

இன்று நம் நாட்டை நினைத்து வருந்துகிறோம். விடுதலைக்குப் பின், நாம் இப்போது சுதந்திரத்தை இழக்க வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்குவோம். துண்டு துண்டாக உடைப்போம். அப்போது நமக்கு எதுவும் மிச்சம் இருக்காது. இது ஒரு நோய்.” என்றார்.

மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தல் அவசியம்

மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தலொன்று தேவை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கட்டானவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துதெரிவித்துள்ள அவர் தேசத்தை நேசிக்காத ஆட்சியாளர்கள் பதவியிலிருக்கும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால் இடைத்தேர்தல் அவசியம் என அவர்  தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தாங்கள் எப்படி தப்பிபிழைத்து வாழ்வது என்பது குறித்து சிந்திப்பவர்கள் மூலம் உங்களிற்கு எதிர்காலம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தேர்தலிற்கு அழைப்பு விடுக்கின்றோம்,இதன் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் எனகர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மக்கள் உரிமைகளை ஒடுக்குவதற்கான சட்டமூலங்கள் கொண்டுவரப்படுவதையே நாங்கள் இன்று பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை நிர்வகிக்கும் அனைத்து தரப்பினரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர்

நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (டிச. 25) பன்னிப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது உரையாற்றுகையிலேயே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

முன்னைய காலங்களைப் போன்று எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் நிலைமை காணப்பட்டால், இன்று இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது.

புதிதாக தோற்றம் பெறும் அனைத்துக்கும் அடிமையாகி, அனைத்தையும் வணங்கும் சமூகம் எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ளது.

உலகின் சொத்துக்களுக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகாமல், அவற்றின் மீது பேராசை கொள்ளாமல் அவற்றிலிருந்து மீள வேண்டும் என்பதையே இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் வலியுறுத்துகின்றன. புத்த பெருமானும் இதனையே போதித்துள்ளார்.

எமது நாட்டில் தயாரிக்கக்கூடிய அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நாம் பழகியுள்ளோம். இதன் காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அவை எதனையுமே இறக்குமதி செய்வதற்கு எம்மிடம் இன்று பணம் இல்லை.

முன்னைய காலங்களைப் போன்று எமக்கு தேவையானவற்றை நாமே தயாரிப்பதற்கு பழகிக்கொண்டிருந்தால், இன்று எமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணமாகும்.

நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர்.

நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை.

எம்மிடம் சொத்துக்கள் காணப்படுவது போதுமானதல்ல. இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வறுமை நிலையில் உள்ளவர்களுடன் நத்தார் தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என்றார்.

மோசமான ஆட்சியாளர்களால் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டுள்ளது – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும்போது இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறி குருச வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (டிச 21) இரவு இடம்பெற்ற ‘நம்பிக்கையின் பிறப்பு’ எனும் நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் 6.1 மில்லியன் மக்கள் ஒருவேளை உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை நாட்டில் இவ்வளவு அழிவுகளுடன் கொண்டாட முடியாதுள்ளது.

ஆட்சியாளர்களின் மோசமான செயல்களால் நாட்டுக்கு இப்படி நேர்ந்துள்ளது. பிச்சைக்காரர்கள்போல் உணவும் பானமும் கேட்டு உலகம் முழுவதும் செல்கிறார்கள்.

இவ்வளவு அழகான, பசுமையான எமது நாடு உணவு மற்றும் பானங்களுக்காக பிச்சை எடுப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். மோசமான ஆட்சியாளர்களின் செயலால்தான் நாட்டுக்கு இந்த நிலையை நேர்ந்துள்ளது என்றார்.

கருத்து சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் நசுக்குகிறது – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆவேசம்

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குகிறது என்று, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், இன்று (08) தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றும் அவற்றுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள் அல்லது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தும் மனித உரிமைகளுக்கான போராட்டக்கார்களுக்கு எதிராக தற்போதுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படுவது கொடூரமான மற்றும் சகிக்க முடியாத அடக்குமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறான மற்றும் நியாயமற்ற முறையில் முறையில் பயன்படுத்துவதற்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் அத்தகைய கொள்கைகளுக்கு அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும் நாங்கள் அரசாங்கத்தை கண்டிக்க விரும்புகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட மூவர், அவர்கள் மீது தெளிவான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் அநியாயமான முறையில் 75 நாட்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கர்தினால் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த வகையான நெறிமுறையற்ற நடைமுறையை எந்த சூழ்நிலையிலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

அதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, எவ்வித தீவிர உணர்வும் இன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்படும் முறையற்ற விதம் குறித்தும் எமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.