‘முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகளினால் தான் பொது மன்னிப்பு பெற்றுக்கொடுத்ததாக வெளிப்படுத்தப்படும் கருத்தை மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்குடன் தொடர்புடைய வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனதுபக்க நியாயத்தை முன்வைக்கும் ஆவணத்தை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மேலும் சில காரணங்கள் எனக்கு நினைவிருக்கின்றன. அதேபோன்று, அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு தகுந்த காரணங்கள் இருந்தது என்பதும் எனக்கு நினைவிருக்கிறது” என்று அந்த பத்திரத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டுக்காகவே தான் செயற்பட்ட தாகவும் முன்னாள் ஜனாதிபதி அதில் தெரிவித் திருக்கிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட ஜனாதிபதி மன்னிப்பை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றத்தினால் நேற்று (17) வழங்கப்பட்ட தீர்ப்பின் ஒரு பகுதியாக இந்த ஆவண வாக்குமூலம் அமைந்துள்ளது.
அந்த ஆவணப்பத்திரத்தில் வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எல்லா நேரங்களிலும் நாட்டின் நலன்கருதியே செயற்படுகிறேன். தனிப்பட்ட அல்லது அரசியல் காரணமாக மன்னிப்பு வழங்கியதாக கூறப்படுவதை மறுக்கிறேன்.
இந்த வழக்குடன் தொடர்புடைய அறிக்கையொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்தேன். அந்த அறிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரும் சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
கூறப்பட்ட சூழ்நிலையில், என் முன் வைக்கப்பட்டுள்ள விடயங்களைப் பரிசீலித்து, அரசியலமைப்பில் வழங்கப்பட்டு அதிகாரங்களை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தினேன் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.