மதுரை – யாழ்ப்பாணம் இடையே விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்

மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம்

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சந்திக்க உள்ள நிலையில் குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்

அத்துடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழ தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசாங்கமும், திமுகவும் உறுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான தீர்வை எட்டுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

யாழ் – சென்னை நாளாந்த விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சேவையானது யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து விமானம் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்திய அலையன்ஸ் எயார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் சேவைகளை தொடங்கியது.

இதனை தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு ஒருமுறை என யாழ்ப்பாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் சேவைகள் இடமபெற்றன.

அதன்படி கடந்த ஜூன் மாதம் வரை, கொரியர் சேவை மூலம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே 12,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா தாமதிக்காமல் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐநாவும்  உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  உலக நாடுகளை ஒன்றுதிரட்ட மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள்.

உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல், கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (16, 17.05.2009),  உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர்.

இத்துயரத்தை எண்ணி கலங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், ஐ.நாவும் முன் வரவில்லை; வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை. ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள்; காணாமல் போனவர்கள் தமிழர்கள்.

இந்நிலையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’  தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை  ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இச்சூழலில்,  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும். உலக நாடுகளை திரட்ட  ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான  புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது.

ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது; ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள்; எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை விரைவில் ஆரம்பம்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரத்தில் திங்கள்,செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்களில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் இந்த விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் அலையன்ஸ் ஏர் விமானம் தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும்.

பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து அண்ணாமலை உரையாற்றியுள்ளார்.

பிரிட்டனின் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தஇந்த நிகழ்வில் இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுகுறித்து அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளமை  எனக்கு கரிசனை அளிக்கின்றது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த போக்கு கவலையளிக்கும் விடயம் ஏனென்றால் எதிர்வரும் காலங்களில்  இந்த பகுதிகளில் இந்துக்களின் கலாச்சாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பலஆயிரங்களாக இலங்கையின்வடக்குகிழக்கு தனிப்பட்ட கலாச்சாரம் அடையாளம் ஆகியவற்றை பேணிவந்துள்ளன,என தெரிவித்துள்ள அண்ணாமலை புதிதாக பௌத்ததொல்பொருள் கட்டிடங்கள் இந்த பகுதியில் உருவாகிவருவது ஈழத்தமிழர்களிற்கும் பௌத்தர்களிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தசாப்தங்களில் நிரந்தரதீர்வை காண்பதற்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதுஅவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி

சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது.

மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் தற்போது  கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.

அதன்படி, நினைவுச் சின்னம் அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களை கடலில் வீசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆமைகள் முட்டையிடும் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் தமிழக பாரதிய ஜனதாக கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்து வந்த  நிலையில் மத்திய பா.ஜ.க அரசு அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – மதுரை இடையே விரைவில் விமான சேவை – நிமல் சிறிபால டி சில்வா

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்குமி டையில் தற்போது நான்கு தினங்கள் இடம் பெறும் விமான சேவைகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவைகள் மற்றும்  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கு விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை மூலம் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வடக்கில் காங்கேசன்துறை துறைமுகத்தில் அரசாங்கத்தின் செலவில் 450 மில்லியன் ரூபா செலவில் முனையத்திற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கேசன்துறைக்கான முதலாவது கப்பல் அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தது. இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் சுமார் 500 பேருக்கு அதிகமானோர் அதில் வருகை தந்திருந்தனர்.

இந்த கப்பல் சேவையை வாரத்திற்கு ஒரு முறை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க பலாலி விமான நிலையத்தை நாம் நிர்மாணித்து வழங்கியுள்ளோம்.

வாரத்திற்கு நான்கு தினங்கள் விமான சேவைகள் இடம் பெறுகின்றன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை விமானப்பயணச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த விமான சேவையை 7 நாட்களுக்கும் தொடர்வதற்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வேறு விமான சேவை நிறுவனங்களும் விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதற்கு அனுமதி வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.

சென்னைக்கும் பலாலிக்குமிடையில் அந்த விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரிய விமானங்களை அங்கு தரையிறக்கும் வகையில் விமான ஓடுபாதைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வுள்ளன.

அது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா – யாழ். கப்பல் சேவை தற்போது சாத்தியம் இல்லை

இந்தியா – யாழ்ப்பா ணம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் சாத்தியக்கூறு இந்த ஆண்டு இறுதிவரை இல்லை என்று விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகளுடன் முதல் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் கப்பலை வரவேற்ற பின்னர் துறைமுக முனையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் 25 கோடி ரூபாய் செலவில் பயணிகள் முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் பலமானது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாசார ரீதியான உறவுகள் மேலும் பலமடைய வேண்டும். இதற்கான வாய்ப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் அமைந்துள்ளது.

எனினும், இந்தியா – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அது இந்தஆண்டு டிசெம்பருக்கு முன்னர் பூர்த்தியாகாது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை அடுத்த வருடத்திலாவது ஆரம்பிக்க வசதிகள் செய்யப்படும் – என்றும் கூறினார்.

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.