காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார்.

யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்ப்பதோடு இரண்டு நிறுவனங்கள் இதனை ஆரம்பிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய கப்பல்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் அதேவேளை அவை 1000 மெட்ரிக் தொன்னிற்கும் குறைவாக கொள்ளளவுடையவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்-சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியது. இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.
வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.

பலாலி- சென்னை விமானசேவை 12 ஆம் திகதி முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைவதற்கும் பலாலி விமான நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழில் இருந்து சென்னைக்கு 12ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் விமான சேவைக்கான விமான சீட்டுக்கள் இன்று முதல் முற்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான நவீன் என்கிற எம். சக்கரவர்த்தி, ஜே சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் வாகனச் சோதனையின் போது, ​​இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் பொடிகள் மீட்கப்பட்டது தொடர்பாக வழக்கு என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன் புலிகளைப் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பியதாக தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கைத் தமிழ் மக்களால் அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் குறிக்கும் மே 18 அன்று வேலைநிறுத்தம் செய்யவும் இவர்கள் திட்டமிட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க‌. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் திங்கட்கிழமை (07) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடி பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது