மரபுரிமைகளை பேண யாழில் உண்ணாவிரத போராட்டம்!

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பமானது

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள்

1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

திருக்கோணேஸ்வரத்தில் இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார். இதைப்போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்க ளுக்கு இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் கடந்த 13.12.2022 அன்று காசியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில், மரபுரிமைகளைப் பாதுகாக்கும் கடமைகளை இந்தியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இந்தியா செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 12 ஆண்டுகாலமாகப் பூட்டியிருந்த இலங்கையின் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தையும் தாங்கள் மீளக் கட்டியெழுப்பி புனர்நிர்மாணம் செய்திருப்பதாகவும் அதன் மூலம் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலநூறு கோடி ரூபாய்களை செலவு செய்து ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கேதீஸ்வரம் சிவாலயத்தை மீட்டெடுத்து புனர் நிர்மாணம் செய்தமையை தமிழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன் எமது நன்றிகளையும் தெரிவித் துக்கொள்கின்றோம்.

இலங்கை திருநாடு இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமி என அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈஸ்வரங்கள் (சிவஸ்தலங்கள்) இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர். அவ்வாறான ஒரு நாட்டில், சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டு, புதிய புதிய பௌத்த கோயில்களை உருவாக்குகிற ஒரு வேலையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகின்றது.

திருக்கேதீஸ்வரத்திற்கு இணையாக பாடல் பெற்றுத் திகழும் திருக்கோணேஸ்வரத்தில்கூட இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய தூதுவர் நேரடியாக அங்கு சென்று, நிலைமையை நேரில் அறிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போலவே முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு புத்த கோயில்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகியவற்றின் அடையாளங்களை எப்படி இலங்கை அரசு மாற்ற முற்படுகிறதோ அவ்வாறே ஏனைய இடங்களும் மாற்றப்படும்.

தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொன்மைமிக்க சைவ ஆலயங்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதன் ஊடாகவே நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்ட அவர்களது மரபுரிமையும் பாதுகாக்கப்படும். ஆகவே இந்திய அரசாங்கம் இவற்றைக் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களின் மரபுரிமைகளை காலாதி காலத்திற்குப் பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

குருந்தூர் பகுதியில் விகாரை அமைக்க வேண்டுமென 46 அமைப்புக்கள் புத்தசாசன அமைச்சருக்கு கடிதம்

குருந்தூர் மலை விகாரை தொல்பொருள் பகுதியில் சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளுக்கு தடை ஏற்படுத்துவது நாட்டின் பொதுச் சட்டத்தையும், அரசியலமைப்பையும் சவாலுக்குட்படுத்தும். குருந்தூர் விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதியில் சட்டத்திற்கு முரணாக கோயில் ஒன்றை ஸ்தாபிக்க முயற்சிப்பது முற்றிலும் தவறானதாகும்.

குருந்தூர் மலை விவகாரம் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அளவிற்கு பாரதூரமாக செல்வதை தடுக்க பொறுப்பான தரப்பினர் சட்டத்திற்கமைய செயற்பட வேண்டும். இல்லாவிடின் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என பௌத்த மத அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளடங்களாக 46 அமைப்புக்கள் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

46 அமைப்புக்களை ஒன்றிணைத்த தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பு இந்த அறிக்கையை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் கட்சிகள் தலைவர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது. 46 பௌத்த மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாவது,

1933ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக சிலைகள் மற்றும் தொல்பொருள் சின்னங்களை கொண்ட குருந்தூர் மலை பகுதியின் 78 ஹேக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் காணி என அறிவிக்கப்பட்டது. அத்துடன் 1924ஆம் ஆண்டு நிலப்பரப்பின் விசேட தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த வரைப்படத்திற்குள் கோயில் மற்றும் தேவாலயத்தின் சிலை சின்னங்கள் விகாரைக்கு ஒதுக்கு புறத்தில் உள் குருந்தூர் குள பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

‘குருந்தக’ என்ற பெயரில் இந்த பௌத்த விகாரை கி.பி 100 – 103 காலப்பகுதியில் பல்லாடநாக என்ற அரசனால் நிர்மானிக்கப்பட்டது. மகாவம்சத்தின் சான்றுப்படி கி.பி 1055-1110 காலத்தில் முதலாவது விஜயபாகு அரசனால் இந்த விகாரை புனரமைக்கப்பட்டது. ஹென்ரி பாகரின் 1886 ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த தொல்பொருள் பூமி தொடர்பில் ‘ காலம் காலமாக நேர்ந்த அழிவுகளை காட்டிலும், இந்த பகுதிக்கு குடியமர்வதற்காக வருகை தந்த தமிழர்களினால் இந்த தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குருந்தூர் விகாரை மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதி முக்கியமான தேசிய மரபுரிமையாகும் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரை மற்றும் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் 1990 தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச கொள்கைக்கமைய இந்த இடத்தை தேசிய மரபுரிமையாக பாதுகாக்க மற்றும் இந்த பூமியின் அபிவிருத்தி பணிகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்துவது பொறுப்பான தரப்பினது கடமையாகும்.

தொல்பொருள் திணைக்களத்தின் சட்டப்பூர்வமான திட்டத்திற்கமைய விகாரையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.இதனை தொடர்ந்து இப்பகுதியின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்திற் கொண்டு தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறி அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்ட அரசியல் தரப்பினருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரச கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.பிரச்சனைகளை தோற்றுவிப்பவர்கள் பொது சட்டத்தை தமது கைகளில் எடுப்பது தவறான எடுத்துக்காட்டாக அமையும். இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இவர்கள் அடாவடித்தனமாக செயற்படுகிறார்கள்.

இதற்கு மேலதிகமாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நீதிமன்றத்திற்கும், சட்டமா அதிபருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது பாரியதொரு குற்றமாகும். சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட பௌத்த விகாரை உள்ள பூமியில் சட்டவிரோதமான முறையில் கோயிலை நிர்மாணிப்பதற்கு அவதானம் செலுத்தப்படுகிறது.

தேசிய தமிழ் அரசியல் டயஸ்போராக்களுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், போராட்டகாரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட தரப்பினருக்கும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி சாதகமாக உள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

குருந்தூர் மலை பகுதில் சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்லாவிடின் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்துள்ளோம். தேசிய மரபுரிமைகளை பாதிப்பிற்குள்ளாக்குபவர்கள் தேசிய மரபுரிமைகளை காட்டிக் கொடுத்தவர்களாக வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுவார்கள்