உள்ளூராட்சி மன்ற தேர்தல் உலக ஜனநாயக தினத்தில் நடத்தப்பட எதிர்பார்ப்பு

சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்விலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கையின் இறுதி வரைவு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுமாயின் தற்போதுள்ள நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணக்கறிக்கை சமர்ப்பிக்காத கட்சிகளின் அங்கீகாரத்தை முடிவுறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

கணக்கறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, விடயங்களுக்கு பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது, இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில அரசியல் கட்சிகள் 2021 ஆம் ஆண்டிற்கான தமது கணக்கறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதை தொடர்ச்சியாக தாமதமப்படுத்தி வந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

14 நாட்களுக்குள் 2021 ஆம் ஆண்டிற்கான தமது கணக்கறிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு, அரசியல் கட்சிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த காலக்கெடு, கடந்த வாரம் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்கறிக்கைகளை உரிய முறையில் இதுவரை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை முடிவுறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிதி விடுவிப்பினை உறுதிப்படுத்தினால் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்

நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் 25ல் தேர்தல் இல்லை – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.

அத்தோடு எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும்

உள்ளூராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தல் குறித்து உரையாட ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடுகின்றது

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது தேர்தலை நடத்துவது தொடர்பான உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேநேரம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தது.

அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவரதனவை சந்திப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் தேர்தல் – ஆணைக்குழு

10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் தற்போது தேர்தலை இரத்து செய்வது குறித்த முடிவு எட்டப்படவில்லை என்றும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்திப்பதற்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டம் கட்டமாக என்றாலும் தேர்தலை நடத்துங்கள் – மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து

தேர்தலை நடத்த நிதி நெருக்கடி காரணமாக இருந்தாலும் அதனை முகாமைத்துவம் செய்து, கட்டம் கட்டமாக என்றாலும் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

உலக ஜனநாயக தினத்திற்கு முன்னரேனும் தேர்தல நடத்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாமை பாரிய குற்றம் என குறிப்பிட்ட அவர், இது கவலைக்குரிய விடயம் என்றும் சாடியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றுக்கு தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கான இயலுமை காணப்படுகிறது என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

நிதியை சேகரித்து தேர்தலை நடத்த முடியாதெனில் , கட்டம் கட்டமாவேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாமையால் பிரதிநிதித்துவ ஜனநாயகம் அற்றுப்போகும் அபாயம் உள்ளது என்பதனால் தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் – மஹிந்த தேசப்பிரிய

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக விரைவில் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உறுப்பினர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி கூடுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 23ஆம் திகதி அறிவித்திருந்தது.

கொழும்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.