நிமல் புஞ்சிஹேவா மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு விண்ணப்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பம் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டம் தொடர்பாக தாம் உள்ளிட்ட தற்போதைய ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பல சட்டமூலங்களை நிறைவேற்றும் நடவடிக்கைக்காக குறித்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.

அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பிக்குமாறு பல சிவில் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்துவத்திற்காகவும் தாம் விண்ணப்பித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருந்தார்.

நிதி அமைச்சு பதிலளிக்காமையால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்படவில்லை

இதுவரை நிதி கிடைக்காத காரணத்தினால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 07 இலட்சம் தபால் மூல வாக்குச்சீட்டுகளில் 75 வீத வாக்குச்சீட்டுகளே இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை உரிய முறையில் வழங்குமாறு கோரி நிதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிதி உரிய நேரத்தில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர், வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க முடியாது எனவும் அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய நேரத்தில் நிதி கிடைத்தால் 30 நாட்களுக்குள் வாக்குச்சீட்டுகள் முழுவதையும் அச்சடித்து வழங்க முடியும் என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடும் சரியான திகதியை 03 நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கும் பட்சத்திலேயே, பாதுகாப்பினை வழங்க முடியும் என அரச அச்சகத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் 533 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரச அச்சகம் கூறியுள்ளது.

எனினும், 40 மில்லியன் ரூபாவே இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுக்களை இருபதாம் திகதிக்கு முன்னர் வழங்க முடியாது – அரச அச்சகம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு செலவாகும் பணம் இதுவரை செலுத்தப்படாததால், அதற்கான பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிட 152 மில்லியனும் ஊழியர்களின் கொடுப்பனவிற்காக 52 மில்லியன் ரூபானும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் இதுவரை தம்மால் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 40 மில்லியன் மட்டுமே திறைசேரியில் இருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு பணம் கொடுக்க ஜனாதிபதி ரணிலின் ஒப்புதலை நாடும் நிதி அமைச்சு

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பணத்தை வெளியிடுவதற்கு தம்முடைய அனுமதி போதாது என நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு தனது அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு முன்னதாக அறிவித்திருந்தார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிள்ளையார் திருமணம் போன்றது – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான நேற்றைய போட்டியின் போது திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் இடையேயான வெற்றிகரமான ஆட்டம் குறித்து, மஹிந்த தேஷப்பிரிய தனது முகநூலில் வாழ்த்து தெரிவித்து பதிவொன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு கருத்துக்களை பதிவிட்ட ஒருவர்‘அதிகாலை எழுந்தவுடன் கிரிக்கெட் பற்றிப் பதிவிட வேண்டும், அப்போதுதான் தேர்தலை மக்கள் மறந்து விடுவார்கள்’ எனப் பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்து மஹிந்த தேஷப்பிரிய,“இந்த தேர்தல் பிள்ளையார் திருமணம் போல, நாளைக்கு உன் திருமணம்னு சிவன் சொன்னாராம். பொன் தாளில் எழுதிக் கொடுத்தாராம்.

தினமும் காலையில எழுந்து பார்க்கிறவர், “ஆ நாளைக்கு கல்யாணம்” என்று சொல்லிவிட்டு, தன் காரியத்தில் இறங்குகிறாராம். .” என்று பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நடாத்துவதற்குப் பொருத்தமான சூழல் இப்போது இல்லை – ஜனாதிபதி

இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒன்றை நடத்துவதால் பெரிய மாற்றம் ஒன்று வந்துவிடப்போவதில்லை. நாங்கள் ரூபாவை மேலும் வலுவடையச் செய்ய வேண்டியதே தற்போது முக்கிய விடயமாகும்.

இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்குக் குறைந்தது 4 வருடங்களாகும் எனப் பலர் கூறினார்கள். ஆனால், 8 மாதங்களில் நெருக்கடியைத் தீர்க்க முடிந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்; நிவாரணம் வழங்கப்படும்.

ஏனைய கட்சியினர் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

பந்து எங்கள் கைகளுக்குக் கிடைத்துள்ளது. அடித்து ஆடத் தயாராக இருங்கள்.“ என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தபால்மூல வாக்களிப்பு திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்து தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றய கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்த்க்கது.

Posted in Uncategorized

வாக்குச்சீட்டு அச்சடிக்கும் வாய்ப்புள்ளது: அரச அச்சகர்!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (7) காலை இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ள திறைசேரிக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக, அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தெரிவித்தார்.

மேலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது அச்சிடப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை மீள்பரிசீலனை செய்து அவற்றை வழங்குமாறும், பொலிஸ் பாதுகாப்புக்காக பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்குமாறும் ஆணைக்குழு குறிப்பிட்டதாக கங்கானி லியனகே தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி – தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது.

இதன்போது திறைசேரி செயலாளர், அரச அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் திறைசேரி செயலாளர் அதில் கலந்துகொள்ளவில்லை.

இம்மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

புதுவருடத்தின் முன் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை – புதுவருடத்தின் முன் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி திறைசேரியின் கைகளிலேயே உள்ளது என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, ஏப்ரல் நடுப்பகுதியில் வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவ இதனை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் திறைசேரி தேர்தலுக்கான நிதியை உடனடியாக விடுவித்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். எனவே, 2023 ஏப்ரல் இரண்டாம் பாதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தேர்தல்களை நடத்துவதற்கு போதிய நிதியை வழங்குவதாக உறுதியளித்தால், நாளை காலை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தேர்தலுக்கான குறுகிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக புஞ்சிஹேவ தெரிவித்தார்.

“தேர்தல் ஆணைக்குழுவால் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியுமா இல்லையா என, என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு போதுமான நிதி கிடைப்பதைப் பொறுத்தது. நாளைய கலந்துரையாடலில் போதிய நிதியை வெளியிடுவதற்கு திறைசேரி பொறுப்பேற்றால், உள்ளூராட்சித் தேர்தலை அருகில் உள்ள நாளில் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். பந்து திறைசேரியின் கைகளில் உள்ளது” என்று புஞ்சிஹேவ வலியுறுத்தினார்.

“இருப்பினும், தேர்தலுக்கு நிதியை விடுவிப்பதில் தாமும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் தற்போது அவ்வாறு செய்வதற்கு போதுமான பணம் இல்லையென திறைசேரி கூறலாம். அவர்களால் சில மாதங்களில் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என கூறலாம். ஆனால், விவாதத்தில் நாளை இந்த மாதிரியான சூழல் உருவாகும் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை உடனடியாக பெறாவிட்டால், தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்ட சிக்கலை எதிர்கொள்ளும்.

தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தக்கவைக்க வேண்டாம் என்று திறைசேரிச் செயலாளருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, திறைசேரி அதிகாரப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதியை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது. இல்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை.

திறைசேரி உடனடியாக நிதியை விடுவிப்பதாக உறுதியளித்தால், தேர்தல் நடைபெறும் நாளைக் குறிக்கும் வர்த்தமானி அறிவிப்பை 25 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் புதன்கிழமை (8) மற்றும் வியாழனில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு முயற்சி செய்யும்.