தீர்க்கமான முடிவின் பின்னரே தேர்தல் குறித்த அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொறுத்தமான தினம் குறித்து பல தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் , எதிர்வரும் இரு தினங்களுக்குள் இடம்பெறவுள்ள பல்தரப்பு தீர்க்கமான கலந்துரையாடலின் பின்னரே உத்தியோகபூர்வமாக தினம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தமிழ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் தேர்தல் நடத்தப்படாமல் , அதற்கான புதிய தினம் அறிவிக்கப்பட வேண்டுமெனில் பழைய தினத்திலிருந்து 21 நாட்களின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கமைய ஏப்ரல் முதலாம் வாரத்தில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஏப்ரல் இரண்டாம் வாரம் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை என்பதால் குறித்த காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாதெனக் கூறி தேர்தல் ஆணைக்குழு , அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

இவ்வாறு பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழுவின் தலைவரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் குறித்து ஆணைக்குழு இன்னும் தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இவ்விடயம் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. எனவே தான் அடுத்த வாரம் மீண்டும் கூடி இது தொடர்பில் அறிவிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அடுத்த கூட்டத்தில் எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவல்களுடனும் கலந்துரையாடப்பட்ட பின்னரே தினம் உறுதி செய்யப்படும் என்றார்.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படத் தயார்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடையின்றி விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு மதிப்பளித்து செயற்பட நிதி அமைச்சு தயாராகவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கித்துல்கல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.

எந்த தரப்பினராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் நிதியமைச்சு என்ற வகையிலும், அதனை மதித்து செயற்படுவதாகவும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன், நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செலவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் சார்பில்  சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

அரச அதிகாரிகளை அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் அவர்களை அழைக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் நேற்று (03) வழங்கிய தீர்ப்பிற்கமைய, நிதி அமைச்சு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி குறித்து எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அறிவிப்பதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Posted in Uncategorized

உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒரு வருடம் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சி – பவ்ரல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முறையை மாற்றுவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் மோசமான முறையில் தலையீடு செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டியதில்லை என குறிப்பிட்ட அவர், தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், அதனால் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இதன் மூலம் ஏற்படப்போவதில்லை என தெளிவுப்படுத்தினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் வெளியாகும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று (03) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி இன்று தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திகதி தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை ரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மஹிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணைக்குழு உறுப்புரிமைக்கு விண்ணப்பம்

அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் கோரும் பணி முடிவுற்றுள்ளதாகவும் புதிய உறுப்பினர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.

தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது.

தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு கிடைக்காமை, வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமை போன்ற காரணிகளால், அண்மை நாட்களில் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளுக்கு பாரிய தடை ஏற்பட்டிருந்தது.

தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்குமாயின் 25 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து வாக்குச்சீட்டுகளையும் அச்சடிக்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு உள்ளதாக அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி, எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, திட்டமிட்டபடி மார்ச் 09ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நிலையில், இந்த தகவல் வந்துள்ளது.

 

சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது – தேர்தல் ஆணைக்குழு தலைவர்

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் தான் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (24) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மட்டுமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதில் உள்ள சிரமம் குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized