உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான திகதி நிச்சயமற்ற நிலையில் இருக்கும் அதேவேளை தம்மால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேர்தலை நடத்துவது குறித்த எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என இரண்டாவது தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடுகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட மாட்டாது

ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது பேச யாரும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் அதற்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இது தொடர்பில் திறைசேரிக்கு மீண்டும் நினைவூட்டல் விடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 25ல் தேர்தல் இல்லை – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.

அத்தோடு எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும்

உள்ளூராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதித் தேர்தலுக்கான அவசியம் தற்போது இல்லை – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம்.

எந்த தேர்தல் இடம்பெற்றாலும் வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இம்மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இந்த சட்டமூலத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்படும்.

ராஜபக்ஷர்களை திருடர்கள் என விமர்சித்து ஒருதரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் எவ்வித சட்டங்களும் இயற்றப்படவில்லை. தற்போது பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்படவுள்ளதையிட்டு பெருமையடைகிறோம். ஆகவே ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம் தொடர்பில் தற்போது பல்வேறு மாறுப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.“ எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளை கண்காணிக்கும் குழு பிரதமர் இடையே சந்திப்பு

உள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பிரதமர் தலைமையில் நேற்று கூடியது.

மேற்படி குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களும் நேற்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டை நிர்வகிப்பது இந்தக் குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநர்களும் மாவட்டச் செயலர்களும் கண்காணித்து முன்பைப் போன்று மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த நிறுவனங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் தேர்தல் – ஆணைக்குழு

10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் தற்போது தேர்தலை இரத்து செய்வது குறித்த முடிவு எட்டப்படவில்லை என்றும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்திப்பதற்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டம் கட்டமாக என்றாலும் தேர்தலை நடத்துங்கள் – மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து

தேர்தலை நடத்த நிதி நெருக்கடி காரணமாக இருந்தாலும் அதனை முகாமைத்துவம் செய்து, கட்டம் கட்டமாக என்றாலும் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

உலக ஜனநாயக தினத்திற்கு முன்னரேனும் தேர்தல நடத்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாமை பாரிய குற்றம் என குறிப்பிட்ட அவர், இது கவலைக்குரிய விடயம் என்றும் சாடியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றுக்கு தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கான இயலுமை காணப்படுகிறது என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

நிதியை சேகரித்து தேர்தலை நடத்த முடியாதெனில் , கட்டம் கட்டமாவேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாமையால் பிரதிநிதித்துவ ஜனநாயகம் அற்றுப்போகும் அபாயம் உள்ளது என்பதனால் தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் – மஹிந்த தேசப்பிரிய

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக விரைவில் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உறுப்பினர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி கூடுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 23ஆம் திகதி அறிவித்திருந்தது.

கொழும்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.