மீள்குடியேற்றும் பணிகள் அடுத்த வருடத்தினுள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி ரணில்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

அதன்படி இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வட மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம், உதவிக் கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன.

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காசோலைகளை கையளிக்கும் அடையாள நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

கடந்த 33 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகள் மீளக் கிடைத்ததையிட்டு ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வட மாகாணத்துக்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க செனட் சபை குழு வடக்குக்கு விஜயம்

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை நேற்றைய தினம் (07) திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பாக கடந்த மாதம் சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் தொடர்புடைய ஆவணங்களும் அமெரிக்க செனட் சபையின் குழுவினருக்கு கையளிக்கப்பட்டது.

இதன்போது, பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வோமெனவும் அமெரிக்க செனட் சபையின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.