இலங்கை மூன்று நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது

இந்தியா சீனா தாய்லாந்துடன் இலங்கை வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

தனது பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டுள்ள நிலையிலேயே இலங்கை இந்த மூன்று நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

2018 இல் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக தாய்லாந்து அதிகாரிகள் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர் எனசுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முக்கிய அதிகாரி கே.ஜே வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான இந்தியா சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் பெப்ரவரி மார்ச்சில் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது முதலீட்டை கவர்வது குறித்தே கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2023 அல்லது 2024 ஆரம்பத்திற்குள் இந்த பேச்சுவார்த்தைகளை முடிவிற்கு கொண்டுவருவதே எனது நோக்கம் என கே.ஜே வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் காரணமாக இந்த பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன நாங்கள் பேச்சுவார்த்தைகளிற்காக சென்றுகொண்டிருக்கின்றோம் என தாய்லாந்து  அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை : இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா

சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு டொலரை பயன்படுத்தாமல் ரூபாயை பயன்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதன்படி தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பேர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்த பொறி முறையைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் மொஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடைமுறை முன்னதாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் டொலர் பற்றாக்குறை உள்ள நாடுகளை இந்த பொறிமுறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் பொறிமுறையை அமைத்தது.

அதன்படி இந்திய மத்திய வங்கி, ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகத்திற்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளை திறக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மேற்கூறிய நாடுகளை தவிர மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் இலங்கையுடனான வர்த்தகத்திற்கான ஐந்தும் மொரிஷியஸ் உடனான வர்த்தகத்திற்காக ஒன்று உட்பட ஆறு கணக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை எண்ணை வளம்கொண்ட சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளிட்ட பெரிய வர்த்தக பங்காளிகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை மதிப்பாய்வு செய்வது குறித்து இந்தியா தொடர்ந்து விவாதித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் இம்மாத இறுதியில் பேச்சு

இந்தியாவுடனான நிறுத்தப்பட்ட ‘எட்கா’ ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை இந்த மாத இறுதியில் இலங்கை ஆரம்பிக்கவுள்ளது என்று சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரதான பேச்சாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

“நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு வர்த்தக உடன் படிக்கைகள், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமான – எட்காவை செயல்படுத்த இலங்கை விரும்புகிறது. இது தொடர்பான பேச்சை இந்த மாத இறுதியில் தொடங்குவோம். இந்தியா – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இருந்து நடைமுறையிலுள்ள (ஐ. எஸ். எவ். ரி. ஏ.) உடன்படிக்கை விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த 2016 – 2019 காலப்பகுதியில் நாம் 11 சுற்று பேச்சுகளை முடித்துள்ளோம்”, என்றும் அவர் கூறினார்.

“இறக்குமதியை பொறுத்தவரை இலங்கை சீனா, இந்தியாவை நம்பியுள்ளது. 2021ஆம் ஆண்டு இந்தியாவிடமிருந்து 474 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்கள் – சேவைகளை இறக்குமதி செய்துள்ளது. ஆனால், 98 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்கள் – சேவைகளை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, இதில் காணப்படும் சமச்சீரற்ற தன்மை தொடர்பில் எட்கா உடன்படிக்கை தொடர்பாக இலங்கை பேச விரும்புகிறது. இதற்காக இந்தியாவுக்கான ஏற்றுமதி ஒதுக்கீட்டை தளர்த்த பேச்சு நடத்த இலங்கை விரும்புகிறது – என்றும் தெரிவிக்கப்பட்டது.