இலங்கையும் தென்னாபிரிக்காவும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்  S.E.Schalk உடன் ஒரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவது மற்றும் நாட்டின் சட்ட அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும், சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தென்னாபிரிக்கா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோதலைத் தொடர்ந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இலங்கை மேற்கொண்ட நல்லிணக்கத் திட்டத்தைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் சட்ட அமைப்பை வலுப்படுத்தும்  சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என நீதி அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளில் விசேட கவனம்

சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் 400 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது தான் நீதியமைச்சராக பதவி வகித்த போது சிறைச்சாலைகளில் இருந்த விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 110 ஆக குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் விசேட மேல நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வழக்கு எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 31 பேர் உள்ளனர்.

இவர்களில் 16 பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையிலும் 15 பேர் சந்தேகத்தின் அடிப்படையிலும் தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடயங்களை பெற்றுக்கொண்டு, சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு விசேட குழுவை அமைத்து சிறை கைதிகளின் வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் அனுமதியுடன் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலா வீசாவில் வெளிநாடு சென்று தொழில் தேடுபவர்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – விஜேதாச

சுற்றுலா வீசாக்களில் வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு தொழில் தேடிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சு மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர்  மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலா வீசாக்கள் ஊடாகச் சென்று வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தொடர்பில் கடந்த சில தினங்களாகவே அதிகளவான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் எம்மிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அன்றைய தினமே இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் சில பட்டியல்கள் காணப்படுகின்றன. அவற்றிலுள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டு , சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா வீசாக்கள் வழங்கப்படுகின்றமை சுற்றுலா செல்வதற்காகவேயாகும்.

ஆனால் சுற்றுலா வீசாவில் சென்று அங்கு தொழில் தேடுபவர்கள், தொழில் கிடைக்கவில்லை எனில் வெவ்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுடனும் , நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து , இலங்கையிலுள்ள அந்த நாடுகளுக்கான தூதரகங்களுக்கு இது தொடர்பில் அறிவித்து வீசாவை வழங்குமாறு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் – விஜயதாஸ

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான சட்டமூலம் மூன்று மாத காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் புதிய லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

2015ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டு, அதற்கான சட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு துரதிஸ்டவசமாக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. எக்காரணிகளுக்காகவும் தேசிய பாதுகாப்பை மலினப்படுத்த முடியாது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் 2016 ஆம் ஆண்டு குறிப்பிட்ட விடயத்தை தொடர்ந்து நான் இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன்.

ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு உரிய தரப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதுடன், தகவல் குறிப்பிட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது, எக்காரணிகளுக்காவும் தேசிய பாதுகாப்பையும், பொது மக்கள் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்த முடியாது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்யும் நோக்கம் கிடையாது. தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி புதிய சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது, குழுவினர் அறிக்கை சமர்ப்பித்ததும் மூன்று மாத காலத்திற்குள் தேசிய பாதுகாப்பிற்கான சட்டத்தை உருவாக்கும் சட்டமூல வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

2023 இற்கு முன்னர் காணாமல்போனோர் விசாரணைகள் நிறைவடையும் – நீதியமைச்சர்

அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனை தெரவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும், சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தூதுவர் பாராட்டினார்.

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அமெரிக்க தூதுவர் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், இலங்கையில் புதிய அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காகவும், இது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காகவும் அமைச்சருக்கு தூதுவர் தனது நன்றியை தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவைகள் உள்ளிட்ட நலன்புரி திட்டங்களுக்கும் தூதுவர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதன்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்று நீதியமைச்சர் அமைச்சர், அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.