அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

அம்பாந்தோட்டையில் உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது.

சினொபெக் வெளிநாட்டு முதலீட்டு நிறுவவனத்தின் அதிகாரிகளுக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சினோபெக்கின் நிர்வாகம் அசல் முன்மொழிவு மற்றும் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்கள் திட்டத்துக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகளைத் தொடங்க உள்ளனர். நீர் வழங்கல், மின்சாரம், நில ஒதுக்கீடு உள்ளிட்ட வசதிகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Shell – RM Parks – CPSTL இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

உள்நாட்டு எரிபொருள் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிட்டதன் பின்னர், இலங்கையில் முதலீடு செய்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட Shell – RM Parks நிறுவனத்திற்கும், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கும் இடையில் எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தமொன்று இன்று (12) கொலன்னாவை, இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனூடாக, Shell – RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்களை இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் சேமித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08 ஆம் திகதி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இது தொடர்பான முன் உடன்படிக்கையில் கைசாத்திட்டிருந்த நிலையில், உரிய எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரையின் பேரில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருள்

சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் உற்பத்தியில் 20 சதவீதத்தை கொள்வனவு செய்ய இலங்கைக்கு உரிமை உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சீன பெட்ரோலியம் மற்றும் கெமிக்கல் கோர்ப்பரேஷன் அல்லது சினோபெக் நிறுவனம் இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசித்தமையை அடுத்து, எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.

இதன்படி உத்தேச ஹம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்தில், நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படலாம் என்றும், அதன் கொள்ளளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்டத்தின் போது சினோபெக் நிறுவனம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்டுவரவுள்ளது.

இது நான்கு ஆண்டுகளில் முழுமையாக அமைக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டுகளில் அரசாங்கம் குறைந்தபட்சம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கைக்கிடையில் பெற்றோலிய குழாய் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.

தொழில்நுட்ப ஆய்வுகள், தேவையான சந்தை பகுப்பாய்வு, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பொறிமுறையை தீர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேக குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் எண்ணெய் தாங்கி, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 200 மில்லியன் டொலர் கையிருப்பினை பேணும் நிலையை எட்டியுள்ளது – டீ.வி.சானக

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல தசாப்தங்களின் பின்னர் 200 மில்லியன் டொலர் நிலையான கையிருப்பினைப் பேணும் நிலைமையை அடைந்துள்ளது. அத்தோடு டீசல், பெற்றோல் உட்பட சகல எரிபொருட்களிலும் பல ஆயிரம் மெட்ரிக் தொன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022ஆம் ஆண்டு எரிபொருள் இன்றி வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்புக்களின் பலனாக தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வலுசக்தி பாதுகாப்பிற்காக 200 மில்லியன் டொலர் நிலையான கையிருப்பினை பேணக் கூடியதாகவுள்ளது.

அது மாத்திரமின்றி 130 ,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல், 83 ,275 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல், 8,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல், 11, 000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோல், 17, 000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் மற்றும் 75, 000 மெட்ரிக் தொன் மின்சக்திக்கான எரிபொருள் என்பனவும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் எதிர்வரும் 6 மாதங்களுக்குத் தேவையான எரிபொருளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டு, நீண்ட கால ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

டிசம்பர் – மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலநிலை என்பதால் எரிபொருள் பாவனையும் அதிகரித்துள்ளது.

இதனால் எரிபொருட்களின் விலை உலக சந்தையில் உயர் மட்டத்தில் காணப்படுகிறது. எனினும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தின் பின்னர் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் விலைகளில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்படும்.

15 ஆண்டுகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் ஒரு சதம் கூட கட்டப்படாத ஆண்டாகப் பதிவாகியுள்ளது.

2022க்கு முன்னரான 15 ஆண்டுகளில் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் ட்டணமாக சுமார் 13 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. ஆனால் 2023இல் எந்த சந்தர்ப்பத்திலும் எரிபொருள் கப்பலுக்கு தாமதக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படவில்லை.

அதே போன்று முற்பதிவு செய்யப்பட்ட தினத்தில் எரிபொருட்களை தரையிறக்காமைக்காக கப்பல் நிறுவனங்களிடமிருந்து எமக்கு 16 மில்லியன் டொலர் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

மேலும் தற்போது மீண்டும் கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதமொன்றுக்கு 3 மில்லியன் டொலர் வருமானம் ஈட்ட முடியும்.

எனவே இனிவரும் ஒவ்வொரு மாதங்களிலும் கப்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக கட்டாயமாக 10, 000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நேரடி டொலர் வருமானம் கிடைக்கும் என்றார்.

சீன சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதன்படி இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சினோபெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் இதற்கான யோசனைக்கு அழைப்பு விடுத்த போது சீனாவின் சினோபெக் நிறுவனமும் மற்றும் Vitol நிறுவனமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை சமர்ப்பித்திருந்தன.

ஆனால் பின்னர் Vitol நிறுவனம் இந்த செயல்முறையிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது சினோபெக் எரிபொருள் நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது எரிவாயு நிலையமான மத்தேகொட சி & ஏ பெற்றோல் நிலையம் சினோபெக் என்ற பெயரில் தனது சேவை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த எரிபொருள் நிலையம் முன்னர் சிபெட்கோவின் கீழ் இருந்ததாகவும், சீனாவின் சினோபெக் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், அதன் உத்தியோகபூர்வ சின்னத்தின் கீழ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய எரிபொருள் நிலையத்தில் 16 எரிபொருள் பம்புகள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வகை எரிபொருளுக்கும் மூன்று ரூபா சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர் சேவையின் தேவைக்கு ஏற்ப, சினோபெக் நிறுவனம் புதிய பம்புகளை நிறுவி ஒரு வருடத்திற்குள் எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் பல்பொருள் அங்காடி வளாகத்தை நிர்மாணிக்கவும், எரிபொருள் நிரப்பு நிலையத்தை நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

சினோபெக் இலங்கை முதலீட்டுச் சபை இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனமும், இலங்கை முதலீட்டுச் சபையும் இன்று உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

இலங்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குதல் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக இந்த உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது.

இறக்குமதி, களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விற்பனை என்பனவற்றுக்காக, இரு தரப்பினரால், 100 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், இந்த உடன்படிக்கையின் கீழ், சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்துடன், இயக்க உள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளுக்காக மேலும் ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் டிவிஸ்(Justion Divis) ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் ஆர்.எம். பார்க்ஸ் நிறுனவனம் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து 45 நாட்களுக்குள் முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க இந்த ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

கடன் பத்திரங்களை திறந்து பட்டியல்களை மீளச் செலுத்துவதற்கு போதியளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் கடந்த காலத்தில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன.

அதனால் நுகர்வோருக்கு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் இந்த மூலோபாயத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, அமைச்சரவை அங்கீகாரத்துடன், நாட்டில் செயல்படும் விநியோக முகவர் வலையமைப்புகள் மூலம் பெற்றோலிய உற்பத்திகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் நிறுவப்பட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

இங்கு, சந்தையில் நுழையும் புதிய சில்லறை விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளில் , உள்நாட்டு வங்கிகளில் தங்கியிருக்காமல் அந்நியச் செலாவணித் தேவைகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என்பது பிரதானமானதாகும். அதன்படி, இந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம்,செயற்படத் தொடங்கி ஆரம்ப ஓராண்டு காலத்தில் வெளிநாட்டு மூலங்கள் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.இதற்கான அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்படும்.

2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழு (CASC) மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (TEC) ஆகியவை முன்மொழிவுகளை ஆய்வு செய்து, பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு பின்வரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க பரிந்துரைத்தன.

அந்த நிறுவனங்கள்,

• Sinopec Fuel Oil Lanka (Private) Limited, F5, ஹம்பாந்தோட்டை மெரிடைம் நிலையம்,மிரிஜ்ஜவெல, ஹம்பாந்தோட்டை

• United Petroleum Pty Ltd, 600, கிளென்பெரி வீதி.ஹேதோன், விக்டோரியா 3122, ஆவுஸ்திரேலியா.

• Shell PLC உடன் ஒத்துழைப்புடன் RM Parks, 1061 N பிரதான வீதி, போர்ட்டர்வில் , கலிபோர்னியா 93257, அமெரிக்கா.

சினோபெக் ஒயில் லங்கா தனியார் நிறுவனம் (M/s Sinopec Fuel Oil Lanka (Private) Limited ) (M/s Sinopec) மற்றும் அதன் தாய் நிறுவனத்துடன் நாட்டில் சில்லறை எரிபொருள் வர்த்தகத்தில் பிரவேசிப்பதற்கு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக, இந்திக அனுருத்த, ஷெஹான் சேமசிங்க தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் மற்றும் குறித்த அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வடக்கு – கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் – கடற்றொழில் அமைச்சர்

சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முழுவதுமான கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் மீனவ மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். மீனவ மக்களின் வாழ்வாதாரம் அன்றாட தொழில் நடவடிக்கை வீட்டு வசதிகள் என்பவற்றை மேம்படுத்தும் முகமாக சீன அரசாங்கம் சுமார் 1500 மில்லியன் ரூபாக்களுக்கான செயற் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஆரம்ப நடவடிக்கையாக இலங்கையில் உள்ள 15 கடற் தொழில் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27 ஆயிரம் படகு உரிமையாளர்களுக்கு, ஒருவருக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக எஞ்சியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

வட மாகாணத்தில் உள்ள நான்கு கடற் தொழில் மாவட்டங்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று கடற்தொழில் மாவட்டங்களுக்கும் விரைவில் மண்ணெண்ணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் கடற் தொழிலாளர்களுக்கான வீடு மற்றும் கடற்தொழிலாளர்களுக்கான வலைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

அது மட்டுமல்லாது எரிபொருள் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு பற்றியில் இயங்கக்கூடிய படகினை சம்பிரதாயபூர்வமாக கடலில் இறக்கியுள்ளோம்.

எரிபொருளிலும் பார்க்க பற்றியில் இயங்குப் படகு இலாபகரமானதாகவும் சூழலுக்கு மாசு இல்லாத தொழில் நுட்பமாக கருதும் நிலையில் அதனை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே ஜப்பான் அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கமும் கடற் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ள நிலையில் விரைவில் அதற்குரிய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.