பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் மனித உரிமைகள் மரபுகளுக்கு ஏற்ப சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் இதற்கிடையில் உறுதிமொழிகளின்படி பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவ்வொன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் முயற்சியை இழுத்தடிக்கும் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போதே இரா.சம்பந்தன் ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருக்கு இதனை வலியுறுத்தினார்.

அதேவேளை, வடக்கு – கிழக்கில் பௌத்த பிக்குகள், தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

அவர்கள் இனவாதத்தைக் கக்கி மதவாதத்தைத் தூண்டி வருகின்றனர். தமிழர் தாயகத்தில் என்றுமில்லாதவாறு பௌத்த மயமாக்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச தரப்பினரிடம் நாம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”

“அரசியல் தீர்வை எட்டும் முயற்சி அரசால் இழுத்தடிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இந்த விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழிலை சர்வதேச நியமங்களுக்கு ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடன் ஆராய்வு

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பு புதன்கிழமை (24) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிப் படகுகளில், VMS எனப்படும் படகுகளை கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதன் அவசியத்தையும், அதன் பராமரிப்பு மற்றும் சேவைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.

அத்துடன் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி கடலில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் என்பவற்றை கண்காணிப்பது மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அதனையடுத்து அக்கூட்டம் தொடர்பில் இருதரப்பினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டத்தின்போது நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பிரச்சினைகள், துறைசார் ஒத்துழைப்பு, சர்வதேசப் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பு உறவுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மிகமுக்கியமானதொரு தருணத்திலேயே கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு இடம்பெற்றது.

இதனப்போது கடந்த சில வருடங்களாக சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டியிருப்பதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கைத்தரப்பு விளக்கமளித்தது.

அதேவேளை இலங்கையின் ஜனநாயகக்கட்டமைப்புக்களின் மீண்டெழும் தன்மை குறித்தும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தமது பாராட்டை வெளியிட்டனர்.

மேலும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கேள்விக்குப் பதிலளித்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் முன்னிலையிலுள்ள வழக்குகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அடுத்ததாகப் பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எடுத்துரைத்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புநாடுகளால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.

அத்தோடு இலங்கை அரசாங்கம் நாணய, நிதி மற்றும் ஆட்சிநிர்வாக மறுசீரமைப்புக்களை ஏற்கனவே மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது குறித்தும், இம்மறுசீரமைப்புக்களின் விளைவாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

அதற்குத் துலங்கலை வெளிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களின் அவசியம் மற்றும் சுயாதீன கட்டமைப்புக்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதுடன் தற்போது திட்டமிடப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளமையைப் பாராட்டினர்.

அதேபோன்று ஜனநாயக நிர்வாகத்தை மேலும் விரிவுபடுத்தக்கூடிய அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஐரோப்பிய அதிகாரிகள் தமது வரவேற்பை வெளிப்படுத்தினர்.

அதுமாத்திரமன்றி ஆட்சிநிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டுக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நினைவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், அக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

மேலும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின்போது, அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அதில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீதியமைச்சானது பொதுமக்களிடமிருந்தும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்தும் திருத்த யோசனைகளைக் கோரியிருப்பதாக இலங்கைப்பிரதிநிதிகள் மற்றைய தரப்புக்கு எடுத்துரைத்தனர்.

அதுமாத்திரமன்றி வெகுவிரைவில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யவிருக்கின்ற இச்சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைந்திருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனையடுத்துக் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கான இலங்கையின் கடப்பாடு குறித்து நினைவுபடுத்தியதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் எனவும் வலியுறுத்தினர்.

இதன்போது இலங்கையின் நீதித்துறைசார் மறுசீரமைப்புக்கள் மற்றும் நல்லிணக்க செயன்முறையில் தமது தொடர்ச்சியான ஆதரவை மீளுறுதிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், புதிதாக நிறுவப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ஏற்கனவே இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய அனைத்துக்கட்டமைப்புக்களும் சுயாதீனமாக செயற்படவேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.

அடுத்ததாக இருதரப்பினருக்கும் இடையிலான வர்த்தகத்தொடர்புகளின் முக்கியத்துவம் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் அவதானம் செலுத்தினர்.

இதில் குறிப்பாக ஐரோப்பிய உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

அதேபோன்று இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை வெகுவிரைவில் இலங்கையில் நடாத்துவதற்கும் இருதரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

மேலும் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அடுத்த 10 வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான புதிய வழிகாட்டல்களை முன்வைத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், 2020 – 2022 ஆம் ஆண்டு வரையான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு அறிக்கை எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

ஜி.எஸ்.பி. பிளஸ்ஸுக்கு மீள விண்ணப்பிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித்தலைவர் உத்தரவாதம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை (13) சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்றது.

ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப் பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அதன்படி, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.

அதேவேளை வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெலை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை முன்னிறுத்தி இதுவரையான காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதிலும், பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட உதவிகளை அமைச்சர் அலி சப்ரி இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் இலங்கையின் வலுவான வர்த்தகப் பங்காளியாக திகழும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கையினால் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பாதிக்கும்

இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைகளை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முடிவு எடுப்பதற்கு முன்னதாகவே இந்த புதிய மாற்றுச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனில் சைபி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கத் தவறினால், இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகச் சலுகை கிடைக்காமல் போகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் போது நீதித்துறை மற்றும் மக்களது கோரிக்கையை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கையில், இந்த செயல்முறை மிகவும் குறைவான வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மீட்டெடுக்க உதவி

ஐரோப்பிய ஒன்றியம் அதன் அமுலாக்கப்பங்காளியான ‘வேல்ட் விஷன்’ உடன் இணைந்து பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் சமூக – பொருளாதாரக்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 மாதகாலத்துக்கான 2 மில்லியன் யூரோ நிதியுதவியின்கீழ் ‘கிரேஸ்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘கீழ்மட்ட மோதல் தடுப்பு’ செயற்திட்டம் வத்தளை பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கற்பிட்டி, நவகத்தேகம, முந்தல் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் சமூக – பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய விரிவான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ‘கிரேஸ்’ செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 130,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சைபி, ‘இலங்கை பாரிய நெருக்கடிக்கு மத்தியில் இருப்பதுடன், இது இலங்கையர்கள் பலரை மிகமோசமாகப் பாதித்துள்ளது. எனவே வெகுவாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரை அடையாளங்காணும் நோக்கிலேயே நாம் ‘வேல்ட் விஷன்’ அமைப்புடன் இணைந்து பணியாற்றிவருகின்றோம். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரில் பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

கடன் மறுசீரமைப்புநடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம்தெரிவித்துள்ளது.

இதேநேரம் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது

நாணய நிதியத்தின் கடனுதவி குறித்து உன்னிப்பாக அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி

இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி தொடர்பில் கண்காணித்துவருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுக்குழுவின் தலைவர் கிரேஸ் ஆசீர்வாதம் ஆகியோருக்கு இடையில் லக்ஸம்பேர்க்கில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கிரேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஏற்றுமதியை மையப்படுத்திய போட்டித்தன்மைவாய்ந்தும், சூழலுக்கு நேயமானதும், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு கொள்கை தொடர்பிலும் அவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி குறித்தும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் 50 மில்லியன் யூரோ நிதியுதவியில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கழிவுநீர் முகாமைத்துவ செயற்திட்டம் குறித்து பிரஸ்தாபித்துள்ள கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றவுடன் இலங்கையில் பசுமை செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவது குறித்துத் தம்மால் பரிசீலனை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கம் இதற்கு தீர்வை காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமறுஆய்வு இல்லாததாலும் அரசியல் நோக்கங்களிற்காக அதனை பயன்படுத்தலாம் என்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தங்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பல அரசியல்வாதிகள்தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பது குறித்து இலங்கையின் பரந்துபட்ட மக்கள் மத்தியில் கருத்துடன்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப மாற்றுவதாக உறுதியளித்தது கடந்த வருடம் அரசாங்கம் முன்மொழிந்த மாற்றங்களை நாங்கள் வரவேற்றோம் ஆனால் அது போதுமானதல்ல  என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என முன்னைய அரசாங்கம் தீர்மானித்த போதிலும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.