சீனாவின் மறுசீரமைப்பு உத்தரவாதமின்றி இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து நாணய நிதியம் பரிசீலனை

சர்வதேச நாணய நிதியம் (IMF) சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவின் உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) Bloomberg News தெரிவித்துள்ளது.

அரிதாகப் பயன்படுத்தப்படும் நாணய நிதியத்தின் ஒரு சரத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை அங்கீகரிக்க முடியும், ஏனெனில் சீனாவின் முறையான உத்தரவாதம் மட்டுமே முன்நிபந்தனையைத் தடுக்கிறது என இது தொடர்பில் நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதியளிப்பதற்கான உத்தரவாதங்களைத் தொடர்ந்து கோருகின்றனர், இதன் மூலம் IMF ஏற்பாட்டிற்கான அவர்களின் கோரிக்கையை நிதியத்தின் நிர்வாக வாரியம் பரிசீலிக்க முடியும்” என்று IMF செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பயன்படுத்தக்கூடிய துல்லியமான IMF கொள்கை முறைகளைப் பற்றி இலங்கையுடன் முன்கூட்டியே விவாதங்கள் நடந்து வருகிறது. IMF ஊழியர்கள் இலங்கை அதிகாரிகளுடன் வெளிப்படையான கொள்கை நடவடிக்கைகளை இறுதில் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், டொலர்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் மற்றும் எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை காரணாமாக இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அது கடனைத் திருப்பிச் செலுத்தாது IMF இடமிருந்து கடன் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உத்தரவாதம் இல்லாமல் உதவியை வழங்குவது குறித்து IMF பரிசீலிக்கும் செய்தி, G20 நிதிக் கூட்டங்களுக்கு அடுத்த வாரம் அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெல்லனின் இந்தியா வருகைக்கு முன்னதாக வந்துள்ளது, அங்கு அமெரிக்கா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான கடன் மறுகட்டமைப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்தப் போகிறது.

முன்னதாக பெப்ரவரியில், இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புப் பொதிக்கு நாடு இருதரப்புக் கடன் வழங்குபவர்களிடமிருந்து போதுமான உத்தரவாதங்களைப் பெற்று, மீதமுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்தவுடன், விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று IMF கூறியது.

மின் வெட்டு இல்லை ; மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கு இதுவரை அறவிடப்பட்ட 680 ரூபா மின் கட்டணம், 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றிற்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம், 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

இது 261 வீத அதிகரிப்பாகும்.

90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையை கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையின் கட்டத்தில் இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது – சரத் வீரசேகர

கடுமையான நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது என சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வங்குரோத்து நிலை ஏற்பட்டபோது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தபட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறம் அதுவரை முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்ததா என்பதை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் – நாணய நிதியம்

குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் சீனா தனது கொள்கைகளை மாற்றவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன்பட்ட நாடுகளின் சந்திப்பொன்றில் சீனாவின் நிதியமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான கடன் கொடுப்பனவாளர்களையும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

கடன் மறுசீரமைப்புக்குத் தயார் என பத்திரப்பதிவுதாரர்கள் நாணய நிதியத்துக்கு அறிவிப்பு

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை இலங்கை பத்திரதாரர்களின் குழு ஏற்றுகொண்டுள்ளது.

அத்தகைய ஈடுபாட்டின் விளைவாக, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் பங்களிப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில், இந்திய அரசாங்கம், 2023 ஜனவரி 16 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக தெரிவித்திருப்பதையும் பத்திரதாரர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோன்று, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் மற்றும் சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கு நாடு மீண்டும் அணுகலை வழங்கவும், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி தயாராக இருப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்க தயார் – பாரிஸ் கிளப்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை இலங்கை வழங்க பாரிஸ் கிளப் (Paris Club) தயாராகவுள்ளது.

பெரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, கடன் மறுசீரமைப்பில் “விரைவில்” தமது ஆதரவை பாரிஸ் கிளப் அறிவிக்க உள்ளதாக விடயத்துடன் தொடர்புடைய ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் இலங்கை, கடந்த செப்டம்பரில் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

எனினும், இந்த நிதி திட்டத்தை பெருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் ஒப்புதல் பெறுவது அவசியம்.

அந்த ஒப்புதலை பெற, முக்கிய இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தை பெற வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் கிளப்பின் உறுப்பினர் அல்லாத சீனாவும் இந்தியாவும், இலங்கைக்கான இருதரப்பு கடன் வழங்குநர்களில் முன்னணியில் உள்ளனர்.

எவ்வாறாயினும், அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க உதவுவதற்கு முன்வந்த இந்தியா, அதற்கான நிதியியல் உத்தரவாதங்களை அளித்தது.

மேலும் சீனாவின் எக்ஸிம் வங்கி கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில், இரண்டு வருட கடன் ரத்து கால அவகாசத்தை வழங்கியது.

சீனாவின் இந்த உறுதிமொழிகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.

எவ்வாறாயினும், பெய்ஜிங் போதுமானதைச் செய்யவில்லை என்று கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

“சீனா இதுவரை வழங்கியது உத்தரவாதம் போதாது. அவர்கள் IMF கடன் நிவாரணத்தை பெற நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதங்களை நாம் எதிர்பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியத்தின் மிகப்பெரிய அங்கத்தவர்களின் ஒருவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிகவிரைவில் இலங்கைக்கு கிடைக்கும் – அமெரிக்கா உறுதி

அனைத்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிகவிரைவில் இலங்கைக்கு கிடைக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஏனைய நாடுகளின் நம்பகத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் கடினமான சீர்திருத்தங்கள் தொடர்பில் கருத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  ஒரு நாடாக செயற்படுவது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சர்வதேச கடன் வழங்குவோரின் நம்பிக்கையான தீர்மானங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,

இலங்கை மிக விரைவில் ஸ்திரமான பொருளாதாரத்தை அடையும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் குறிப்பிட்டிருந்ததாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்

பொருளாதார மறுமலர்ச்சிக்கான மறுசீரமைப்புக்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் வியாழக்கிழமை (ஜன 26) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான செயன்முறைகள் நிறைவடையும் எனவும் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஏற்றுமதிக்கான விவசாய உற்பத்திகளை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது பிரதமரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடனை மறுசீரமைக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் திட்டங்களை உருவாக்கும் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கான ஒரு பாதுகாப்பு வலயம் அவசியமென கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஆகக் குறைந்த்து அரச துறையில் ஊதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், பலர் தங்கள் வருமான மார்க்கங்ளை இழந்துள்ளதால், பொதுத்துறையினர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாரான மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, பணிப்பாளர் கலாநிதி பி. கே. ஜி. ஹரிச்சந்திர மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் துறைப் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி வி. டி. விக்கிரமாராச்சி அவர்களும் இந்த  கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜே.வி.பி யின் ஆலோசனைப்படி செயற்படின் இலங்கை ஆரஜென்டீனாவின் நிலைக்கு தள்ளப்படும் – ஹர்ஷ

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை இடை நிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலையே இலங்கைக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்றாலும் அவர்கள் முன்வைக்கும் சகல நிபந்தனைகளையும் பின்பற்ற கூடாது என குறிப்பிட்டார்.