சுதந்திரத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தின் வன்முறைக்கு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தினால் நேற்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று(04) கிளிநொச்சியில் ஜனநாயக ரீதியிலான‌ போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக‌ மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகளையும், உரிமை மீறல்களையும், வடக்குக் கிழக்கிலே இடம்பெறும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் கண்டிக்கும் வகையிலும், தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை முன்னிறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், வடக்கினைச் சேர்ந்த பல‌ சமூக அமைப்புக்களும் சேர்ந்து நேற்று இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியிலே அமைதி வழிப் போராட்டம் ஒன்றிலே ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்திலே ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல்களிலே நீர்த்தாரைகளும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களை இழுத்தும், தள்ளியும், நிலத்தில் வீழ்த்தியும் பொலிஸார் மிகவும் மோசமான முறையிலே வன்முறையிலே ஈடுபட்டனர். போராட்டத்திலே பங்குபற்றிய மாணவர்களிலே சிலர் கைது செய்யப்பட்டனர்.

அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் நேற்று மேற்கொண்ட போராட்டத்தினைப் பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. நேற்று மாணவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை இலங்கையில் சுதந்திர தினத்தன்று கூட அங்கு வாழும் தமிழ் மக்களுக்குச் சுதந்திரமாக ஒன்று கூடவும், தமது உரிமைகளை வலியுறுத்திப் போராடவும் சுதந்திரம் இல்லை என்பதனை உலகுக்கு வெளிக்காட்டியது.

30 வருட ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னர், தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகவும், தம்மீது தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் அமைதி வழியில் போராடி வருகின்றனர். காணி அபகரிப்பு, இராணுவ மயமாக்கம், சிங்கள பௌத்த மயமாக்கல் என்பவற்றுக்கு எதிராகவும், அரசியற் கைதிகளின் விடுதலை, காணமால் ஆக்கப்பட்டோருக்கான நீதி போன்ற விடயங்களிற்காக தமிழ் மக்களின் போராட்டங்கள் வடக்குக் கிழக்கிலே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் தீர்ப்பதனைத் தவிர்த்து, தனது பெரும்பான்மைவாத வன்முறையினைத் தமிழ் மக்கள் மீது அரசு தொடர்ந்தும் ஏவி வருகிறது.

போராட்டங்களை நசுக்குவதன் மூலம் தன்னுடைய இருப்பினைத் தக்க வைக்க முடியும் என இந்த அரசாங்கம் கருதுகிறது. மக்களின் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கான சுதந்திரம் என்பவற்றினைச் சட்டங்கள் மூலமும், கொடூர வன்முறை மூலமும் அரசு பறித்து வருகிறது. இந்தச் செயன்முறைகளினதும், சிங்கள பௌத்தப் பெரும்பான்மைவாதத்தினதும் ஒரு வடிவமே நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை ஆகும்.

சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தின் நேற்றைய வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது. இனப் பிரச்சினை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு நிலைத்திருக்கக் கூடிய, நீதியான‌ தீர்வுகளைக் காண்பதே அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும். அதனை விடுத்து வன்முறையினாலும், ஒடுக்கும் சட்டங்களினாலும் மக்களின் எதிர்ப்புக் குரலினை நசுக்கலாம் என்ற அரசின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. நெருக்கடி ஒன்றினை நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் ஒன்றுபட்டு எம்மத்தியில் இருக்கும் ஜனநாயக வெளிகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த வெளிகளில் நாம் பொதுமக்களாகக் கூட்டுணர்வுடன் துணிச்சலுடன் இயங்குவதன் மூலம் மாத்திரமே, ஜனநாயகத்தினைப் பலப்படுத்தி, அரசின் அநீதி மிக்க நடவடிக்கைகளைத் தோற்கடிக்கலாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நம்புகிறது – என்றுள்ளது.

பெப்ரவரி 04 – மாபெரும் பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதுடன், அன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் கண்டனப் போரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தமிழ்த் தேசிய இனம் திறந்தவெளி சிறையில் இடப்பட்ட நாள். ஒட்டுமொத்த நாட்டினுடைய இறைமை, ஆட்சியதிகாரம் அனைத்தும் தனித்தே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளிலே ஒப்படைக்கப்பட்டமை என்பது தமிழினம் மீதான தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளிற்கே வழிகோலியது என்பதோடு, 2009 ஆண்டு இனப்படுகொலை எனும் கோரமுகமாய் வெளிப்பட்டதென்பது யாவரும் அறிந்ததொன்றே.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தே தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பென்பது சிங்கள குடியேற்றத்திட்டங்கள், இராணுவமயமாக்கம் முதற்கொண்டு தொடங்கிய இனவழிப்புச் செயன்முறை, 2009 ஆண்டு ஈழப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தை சூறையாடுவதில் மேலும் தீவிரநிலை கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் பெப்ரவரி 04ம் திகதியை கறுப்புநாளாக பிரகடனப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புதினப் பேரணியினை முன்னெடுக்க அழைப்பு விடுக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக தற்போது கையறு நிலையில் உள்ள கிழக்கு மாகாணம் மீதான ஆக்கிரமிப்புக்கள் தாமதமேதுமின்றி முடிவுக்கு கொண்டு வரப்படவும் வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் சுயநிர்ணய உரிமை உடையவர்களாவர் என்பதை ஏற்று ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களிற்கான அரசியல்தீர்வு தொடர்பான முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட பதின்மூன்றாம் திருத்தத்தினை முற்றாக நிராகரிக்கின்றோம்.

தமிழர் தாயகத்தில் முடிவற்றுத் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள பௌத்தமயமாக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை போன்றவற்றிற்கான உரிய தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிப்புக்களை முன்னின்று

நடாத்தும் அரச இயந்திரத்தையும் அதன் நிறுவனங்களையும் கண்டிக்கின்றோம். தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத்தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பிற்காகவும் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி, கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை நடைபெறும் கரிநாள் பேரணியில் பங்குகொள்ள உணர்வுடனும் உரிமையுடனும் அழைத்து நிற்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Posted in Uncategorized

இலங்கையின் ‘சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாகரன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுகின்றன. இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது இன்றுவரை முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேசுப்பொருளாக மாத்திரமே இருக்கின்றது. பெப்ரவரி ஆகவே வடக்கு, கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என மாணவர் ஒன்றிய தலைவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

“அரசாங்கம் பல்வேறு புதிய சட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், நிலங்களை கைப்பற்றி விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளாகள் என இவை தொடர்கின்றன. ஆகவே தமிழர்களின் தீர்வு எட்டப்படும் வரை போராடியே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை.”

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் அரசாங்கத்தின் புதிய உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (TURC) என்பன தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.

“14 வருடங்களாக நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுகத்துக்கொண்டிருக்கின்றோம். எத்தனை ஜனாதிபதி மாறி மாறி வந்தாலும். எனினும் எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை யாரும் கூறவில்லை. 220ற்கும் மேற்பட்ட தாய்மாரை நாம் இழந்துள்ளோம். இவ்வாறான ஒரு சூழலிலேயே நாம் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றோம். ஓஎம்பி, டிஆர்சி என அனைத்தும் பொய்களே. எம்மை ஏமாற்றுவதற்காகவே இவைகள். பிள்ளைகளுக்கு , பாடசாலை மாணவர்களுக்கு என எவருக்கும் சுதந்திரம் இல்லை. எமது உரிமைக்காக போராடுவதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை. ஆகவேதான் நாங்கள் பெப்ரவரி 4ஐ கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.”

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சஹராஜன் சுகந்தி, திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கே.செபாஸ்டியன் தேவி ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம்

23ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு புதன்கிழமை (17) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களது கருத்துரைகள் இடம்பெற்றன.

பொங்குதமிழ் பிரகடனத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைகளான சுய நிர்ணய உரிமை, மரபு வழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் விரைவில் பாரிய மாற்றம் – ரணில் விக்கிரமசிங்க

புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று சனிக்கிழமை (06) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதற்காக தற்போதுள்ள மனித வளப் பற்றாக்குறையைத் தீர்க்க தொலைக் கல்வி முறைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையையும், அதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற புலம்பெயர் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான திறனையும் ஜனாதிபதி விளக்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் விரிவுரையாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு மாணவர்களையும் கவரக்கூடிய வகையில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

யாழ்.பல்கலை. நினைவுத்தூபி தொடர்பில் மாணவர் ஒன்றியத்தினரிடம் விசாரணை

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (04) விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன.

பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல், முள்ளிவாய்க்கால் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இம் முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

தூபி அமைப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களால் நிதி  சேகரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன், அதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளையும், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் இன்றைய தினம் நண்பகல் விசாரணைகளுக்குச் சமூகமளிக்குமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சிரேஷ்ட பொருளாளரும், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர் ஒருவரும், தூபி அமைக்கப்பட்ட வேளையில் இருந்த மாணவர் ஒன்றியத் தலைவரும் இன்று நண்பகல் 1.00 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள விசாரணைகளுக்காகச் சென்றுள்ளனர்.

Posted in Uncategorized

பல்கலை மாணவர்களின் போராடும் உரிமை பொலிஸாரால் பறிப்பு – மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு

நீண்டகாலமாக பேசுபொருளாக காணப்படும் மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பிரச்சினைக்கு வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாக அமைதியான முறையிலேயே போராட்டத்தினை முன்னெடுத்ததாகவும் தங்களால் போக்குவரத்திற்கோ பொதுச்சேவைகளுக்கோ எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தாத நிலையில் எங்களை கைதுசெய்ததானது இலங்கை பொலிஸாரால் எங்களது போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு சென்றுகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் நேற்று பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்த பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள்,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ள,யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சிந்துஜன் கருத்து தெரிவிக்கையில்,

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களுக்கு குரல்கொடுக்கும் வகையில் வடகிழக்கு பல்கலைக்கழக சமூகமாக இணைந்து நாங்கள் பண்ணையாளர்களின் நிலங்களை அபகரிக்கப்படுவதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.இதன்போது பொது போக்குவரத்துக்கு ஏதும் தடைகள் ஏற்படாமலும் எங்களது உரிமையினை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் எனவும் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாவீரர் நினைவுத் தூபியில் ஈகை சுடர் ஏற்றப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்புரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்புரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஈடுபட்டனர்.

அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

சர்ச்சைக்குரிய சட்டத்தரணியின் கருத்தரங்கு யாழ்.பல்கலையில் நிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.

அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து  இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.

இவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக சிற்றூழியர் வெற்றிடத்திற்கு தெற்கை சேர்ந்த 7 பேர் நியமனம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் இவர்களுக்கான நேர்காணல் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நடாத்தி முடிக்குமாறு பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்தும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பலர் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பத்திருக்கும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.