ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சனை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ கலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது என்றும் நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரந்தாலும் அப்போது அரசாங்கத்திற்குல் ஏற்பட்ட பிரச்சினையால் தட்டிக்கழிக்கபட்டது என்றார்.
தற்போதும் இந்த பேச்சுவார்த்தை ஐ நா தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம், பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இருக்கலாம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் சந்தேகம் வெளியிட்டார்.