சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நாட்டில் நீண்ட காலம் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் நாடாளுமன்றத்தில்தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு கடன் உதவியை வழங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்த நிதி எமது ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கும் அத்துடன் வைத்தியசாலைகள், பாடசாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவும் வேண்டும்.
அதேவேளை, நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றமாகவே காணப்படுகிறது. அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒரு அம்சமாக அமைய வேண்டியது அவசியம்.இந்த எமது கோரிக்கையையும் அதில் உள்ளடக்குமாறு நாம் சர்வதேச நாணய நிதியத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளை, ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழல்களுக்கு முக்கியம் கொடுத்து செயற்பட்டமையே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணமாகும். ஊழல்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அதிபரைக் கேட்டுக்கொள்கின்றோம். ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து நாடு செழிப்புள்ளதாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.