நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் இன்றைய விவாதம் இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது. உண்மையிலே ஜனநாயகத்தின் தூண்களில் நாலாவது தூணான ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? அல்லது தொடர்ச்சியாக இந்த ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என கோவிந்தன் கருணாகரம் எம்.பி தெரிவித்துள்ளார்
இன்றைய தினம்(24) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்த சட்ட மூலம் இந்த கால கட்டத்திலே எதற்காக கொண்டு வரப்படுகிறது? உண்மையில் இந்த சட்ட மூலத்தில் கூறிய நோக்கங்களை அடைவதற்காகவா என்ற ஐயம் எனக்கு மட்டுமல்ல இந்த உயரிய சபையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் உண்டு. நமது அரசியல் அமைப்பு போதுமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் அரசியலமைப்பை பேணி பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்களே அரசியலமைப்பை மீறும் செயல்பாடாகவே நான் இந்த சட்ட மூலத்தை நான் நோக்குகின்றேன். மீண்டும் ஒரு அரகலய நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது, என்ற அச்சமே இந்த சட்டமூலத்தை பின்னணி என்பது எனது கருத்து.
ஆட்சித்தலைவர்களிடமிருந்து அமைச்சர்கள் வரை விமர்சனங்களை எதிகொள்ள தயாரில்லை. தமது ஊழல் நிர்வாக சீர்கேடுகளை புள்ளி விபரங்களுடன் புட்டு வைக்கும் போது ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் பயப்பிரதிபலிப்பே இந்த சட்ட மூலம். நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு சாவுமணி. மக்களின் சிந்தனை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கல்லறையில் வைப்பதே இச்சட்ட மூலமாகும். உண்மையிலே இந்த நாட்டில் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் அரசுகள் ஊடக அடக்குமுறையை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார்கள்.
மேலும் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசாங்க அமைச்சர்களினால் ஏற்படுத்தப்படும் ஊழல்களுக்கு எதிராகவோ யாரவது கருத்திட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இந்த நாட்டிலே உண்மையை எழுதிய ஊடகவியலாளர்கள் அரசினால் நடத்தப்படும் படுகொலைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலே கொல்லப்பட்டுள்ளார். அதிலும் 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் ஊடகவியலாளர்களாக இருந்திருக்கிறார்கள். அரசினாலும் அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் அரசதரப்பு படைகளினால் அல்லது வெள்ளை வான்களாலும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட வரலாறுகளும் இந்த நாட்டிலே நடந்தேறி இருக்கிறது.
கருத்து வெளிப்பாடு தொடர்பாக இன்னுமொரு ஜனநாயகவாதி கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் இவ்வேளையில் எனக்கு ஞாபகம் வருகின்றது. உன்னுடைய கைத்தடியை சுழற்ற உனக்கு பூரண சுதந்திரம் உள்ளது. ஆனால் உன்னுடைய கைத்தடி எனது மூக்கு நுனியை தொடாதவரை என்று நான் படித்தது எனக்கு ஞாபகம் வருகின்றது.
இன்று கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்துதலும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டி பார்ப்பதுவுமே கருத்துச்சுதந்திரம் என்ற கருதுகோளாக உள்ளது. அதுவும் தற்போது சமூக வலைத்தளங்கள் பல்கிப்பெருகியமை. உண்மைகளை திரிவுபடுத்துவதை ஊக்கமளிக்கும் நிலைமைகளை ஏற்படுத்துதப்பட்டுள்ளது. போலிப் பெயர்களில், போலி முகங்களில் உண்மைக்கு சவாலாக இருப்பவர்களை தண்டிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.
ஊடகவியலாளர்கள் என்று முகம் காட்டி ஊடக தர்மத்தை சிதைக்க முகம் காட்டுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தேவையும் அரசுக்கு உண்டு. உண்மையிலே இந்த முகநூல் வழியாகவோ அல்லது வட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களூடாகவோ, தனிப்பட்ட காழ்புணர்ச்சியினால் பல சமூக சீர்கேடுகள் எமது சமூகத்திலே இடம் பெறுகின்றது. குறிப்பாக சொல்லப்போனால் குடும்பங்கள் பிரிவதும் சிலர் தற்கொலைக்கு தூண்டபடுவதற்கும் இந்த சமூக வலைத்தளங்கள் உள்ளது. ஆனால் அரசு தன்னை பாதுகாக்க, ஊழலை பாதுகாக்க, தனது அமைச்சரவையை பாதுகாக்க, தனது ஆட்சியை பாதுகாக்க, பொதுவான மக்கள் எழுச்சியை அடக்குவதாக இது இருக்க கூடாது. இதற்கேற்ப வகையிலும் இச்சட்டங்களில் திருத்தங்கள் ஏற்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.