அண்மையிலே இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் தமிழ் மக்களின் நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
ரெலோ, புளோட் மீது தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களின் ”இவர்களுக்கு நாங்கள் தான் மன்னிப்பு வழங்கினோம்” என்ற விமர்சனங்கள் தொடர்பில்
எங்களுக்கு அரசியலில் 40 வருட அனுபவம் உள்ளது. எங்களை விட அனுபவம் வாய்ந்த செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்ற தலைவர்கள் இருக்கின்றார்கள். இளைய உறுப்பினர்கள் அவர்களது அறிவுக்கேற்றவாறு அப்படி வளர்க்கப்பட்டுள்ளார்கள். யார் யாருக்கு மன்னிப்பு கொடுப்பது. தமிழரசுக் கட்சி எங்களுக்கு மன்னிப்பு கொடுத்தார்களா? தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? படித்தவர் என்று கூறிக்கொள்கின்ற முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தன் போன்ற இளையவர்களுக்கு வரலாற்றைப் பற்றி என்ன தெரியும்? புலிகளும் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்களும் தங்களுக்குள்ளே மோதிக் கொண்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் போது புலிகளின் தலைவரும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களும் ஒன்றாக கூடி தமிழ் மக்களின் நலனுக்காக ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தார்கள். மன்னிப்பு கொடுத்ததாகப் பேசுகின்ற தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இழந்த தலைவர்களை விட தமிழரசுக் கட்சி இழந்த தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன், தங்கதுரை, சம்பந்தமூர்த்தி, சிவ சிதம்பரம், நீலன் திருச்செல்வம் இப்படி பல தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் துரோகிப் பட்டத்துடன் புலிகளால் சுடப்பட்டார்கள். இந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குத் தெரியாது. அவர்களிடமும் ஆயுதம் இருந்திருந்தால் சுட வந்தவர்களைத் திருப்பிச் சுட்டிருப்பார்கள். எங்களிடம் ஆயுதம் இருந்தமையால் எங்களைச் சுட வந்த போது எங்களின் பாதுகாப்புக்காக நாங்கள் திருப்பிச் சுட்டோம். இது வரலாறு. உண்மையிலேயே தமிழரசுக் கட்சிக்குத் தான் மன்னிப்புக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் நாங்கள் ஒற்றுமையாகப் பேசி அரசியல் செய்கின்றோம். போராட்டக் காற்றுக் கூடப்படாத தமிழரசுக் கட்சியினர் மன்னிப்புக் கொடுப்பதாக சொல்லுவது நகைப்புக்குரியது.
உண்மையிலேயே இலங்கை இராணுவத்துடன் முதலில் இணைந்து பணியாற்றியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே. பிரேமதாசவின் காலத்தில் 88 -91 வரை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள் புலிகள். அப்போதே அமிர்தலிங்கம் கொழும்பில் வைத்து சுடப்பட்டார். தம்பிமுத்து அவரது மனைவி கொழும்பிலே கனடிய உயர்ஸ்தானிகராலயம் முன் வைத்து புலிகளால் சுடப்பட்டார்கள். இந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குத் தெரியாது. இந்த வரலாறு தெரிந்த மூத்த உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியினுள் இருந்தாலும் ஜனநாயக வழிக்கு வந்த ஆயுத போராட்ட இயக்கங்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் பேசாமல் இருக்கின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில்
உண்மையிலே ஓ.எம்.பி தலைவரின் கருத்து முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். சரணடையும் போது அவர்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினர் பஸ் வண்டியிலே ஏற்றிச் செல்வதை நேரில் பார்த்தவர்கள் இருக்கின்றார்கள். இன்று ஒருவரும் சரணடையவில்லை என கூறுவது அப்பட்டமான பொய் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிங்களத் தலைவர்கள் மத்தியில் மாற்றம் தென்படுகின்ற இந்தக் காலகட்டத்திலே கோத்தபாயவினால் நியமிக்கப்பட்ட இப்படியான அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும். உண்மையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.
காணி சுவீகரிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசிக் கொண்டே உள்ளார்கள். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் வாயே திறப்பதில்லை. காணி சுவீகரிப்பு வடக்கைப் போல் கிழக்கில் பெருமளவில் நடைபெறவில்லை. கிழக்கு மாகாணத்துக்கென விசேடமாக கோத்தபாயவினால் முழுதாக பெளத்தர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணி பல இடங்களைத் தொல் பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக திருக்கோணேச்சரம் கோவிலை அண்டிய பகுதிகள், அம்பாறையிலே இறக்காமம் போன்ற பல இடங்களை அடையாளப்படுத்தி அதைச் சுற்றி வேலியமைப்பது, கல் நடுவது போன்ற விடயங்கள் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாண ஆளுநரின் ஒத்தாசையுடன் எல்லைப்புறங்களிலே மேட்டு நிலப் பயிர்ச்செய்கை என்ற பெயரில் காணிகள் களீபரம் செய்யப்படுகிறது. நாங்கள் தொடர்ச்சியாக இது தொடர்பில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றோம். வியாழேந்திரன், பிள்ளையான் தமது பிரதேசங்களைக் காப்பாற்றுவார்கள் என்றே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகளுக்கு வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசிய அரசியல்
தனிமனித ஆதிக்கத்தையே நாம் எதிர்க்கின்றோம். சம்பந்தன் ஐயாவுக்கு உடல் நலமின்மையால் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தைக் கூட்ட முடியாமலிருக்கின்றது. அதனால் சுமந்திரன் சம்பந்தனின் பெயரை நன்றாகவே பயன்படுத்துகின்றார். இது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதிருப்தி நிலவுகின்றது. ஏனைய கட்சிகள் கூட அவரது நடவடிக்கைகளைக் கண்டித்துக் கொண்டுள்ளார்கள். சில நேரங்களில் சுமந்திரன் நடந்து கொள்கின்ற முறை அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும் அளவில் இருக்கின்றது. அங்கத்துவக் கட்சிகளுடனோ, தன்னுடைய கட்சியினருடனோ கலந்துரையாடி முடிவுகள் எடுப்பதை தவிர்த்துக் கொள்கின்றார். அவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். அண்மையிலே கூட பாராளுமன்றத்தில் நாங்கள் இருக்கும் போது எங்களுடன் கலந்துரையாடாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கையொப்பமிட்டு வந்திருக்கின்றார். அவர்கள் தங்களுடைய நலனுக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைந்து நடத்துமாறு கோருகின்றார்கள். எங்களுடன் கலந்து பேசிருந்தால் மாகாணசபைத் தேர்தலையும் விரைந்து நடாத்துமாறு வலியுறுத்தும் சந்தர்பமாக அது அமைந்திருக்கும். இப்படியான விமர்சனங்களே அவர் மீது வைக்கப்படுகின்றன என தெரிவித்தார்.