13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சாவால் விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்டமானது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு போதுமானது என்றும், புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கு வருகை தரவேண்டுமென்றும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடமாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு விடயங்களை கூறுகின்றார். அவருடைய கூற்றுக்களும், செயற்பாடுகளும் அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது பிரசாரத்தின் ஆரம்பத்தை வடக்கிலிருந்து தொடங்குகின்றார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இதேநேரம், ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானவை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது இந்தக் கருத்து அடிப்படையற்றதாகும். நாட்டின் நீடித்த இனமுரண்பாடுகளை அடுத்தே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு. அவ்வாறான நிலையில், குறித்த திருத்தச்சட்டம் பொருளாதார அபிவிருத்திக்கானது என்று ஜனாதிபதி அர்த்தப்படுத்த முனைவது தவறானதாகும்.
அதேநேரம், மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான காலம் கடந்த நிலையில் இன்னமும் தேர்தல் நடத்தப்படாது தாமதிக்கப்படுகின்றது. முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் இயங்க வேண்டும். அப்போதுதான் மாகாண சபைகள் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.
அதேநேரம், கடந்த காலங்களில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பல்வேறு வழிகளில் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆகவே அந்த அதிகாரங்களை மீள வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மாகாண சபைகளின் நிருவாகத்தினால் முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகள் காணப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை முதலீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுகின்றார். புலம்பெயர் தமிழர்கள் தமது மாகாணங்களில் முதலீடுகளைச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை முதலில் உருவாக்கி அந்த அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.
அவ்வாறில்லாது, புலம்பெயர் தமிழர்கள் தென்னிலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு முன்வரமாட்டார்கள். ஏனென்றால் 1983ஆம் ஆண்டு தமிழர்களையும் அதற்குப் பின்னர் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அந்தந்த இனங்களில் பிரபல்யமான வர்த்தகர்களின் நிலைமைகள் எவ்வாறு மோசமடைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.
ஆகவே, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படுவது இங்கே முக்கியமானதாகின்றது. இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படாத வரையில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தென்னிலங்கையில் இல்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு இன்னமும் பொறுப்புக்கூறப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.
இவ்வாறான நிலையில், புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு வருகை தருவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்திக்க வேண்டும். ஆகவே, ஜனாதிபதி உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளையும், மாகாண சபைகளின் ஊடான அபிவிருத்தியையும் விரும்புபவராக இருந்தால் ஆகக்குறைந்தது வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்காகவாவது தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.