இந்தியா – இலங்கை இடையே படகு சேவைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைவில் அனுமதிக்கும் – தமிழக அமைச்சர் எ.வ வேலு

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா – இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது கடலோர மாநிலங்கள்மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகம் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையைவலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலாதிட்டத்தின் கீழ், மானியமாக தமிழக கடல் சார் வாரியத்துக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அமைச்சர், மத்திய அரசுக்குநன்றி.

இந்தியாவை சர்வதேச அளவில்இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்கவுள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவுஅமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத் தும்.

இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது.ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்தியா – இலங்கை இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.

கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமைவளத் துறைமுகத்தை உருவாக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகளை இத்துறைமுகம்கையாளும் என எதிர்பார்க்கப்படு கிறது. இவ்வாறு அவர் பேசினார்.