எங்கள் எல்லை கிராமங்களை காப்பவர்கள் மலையக மக்களே! – ரெலோ தலைவர் செல்வம் எம். பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள், இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மலையகம் என்பதை நாம் பிரித்து பார்க்க முடியாது காரணம் என்னவென்றால் எங்களுடைய இனத்தின் போராட்டத்திலே பல இயக்கங்கள் உருவாகினாலும் அந்த விடுதலை வேட்கையோடு எங்களுடைய மலையக இளைஞர்கள் அதிலே இணைந்து கொண்டார்கள்.

தங்களுடைய இருப்பிடம் வேறாக இருந்தாலும் உணர்வென்ற அடிப்படையிலே எமது இனம் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த இளைஞர்கள் ஆயுத போராட்டத்திலே இணைந்து கொண்டதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அது மட்டுமல்ல வன்னியிலே சிங்கள எல்லை கிராமங்களை தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், என்றால் இந்த மலையக தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து எங்களுடைய வன்னி மாவட்டத்திலே வடக்கிலே குடியிருக்கும் மலையக உறவுகளின் தியாகம் தான் அந்தந்த குடியேற்றங்களை பாதுகாத்திருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலை வேட்கை என்பது எப்படி உருவானது என பாருங்கள், இளைஞர்கள் ஆயுத போராட்டத்திற்கு சென்றார்கள். ஆனால் மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள். இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என்பதை பல சந்தர்ப்பத்திலே உணர்த்தியிருக்கின்றார்கள்.

மலையகம் என்பது மலை சார்ந்த இடம் அந்த மக்கள் ஒரு தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்கின்ற பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் அவர்களுடைய செயற்பாடு, அனைத்து விடயங்கள் அனைத்தும் எம்மோடு ஒன்றிணைத்து போகின்ற சூழல் மலையகத்தில் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் எமது இனம் ஒன்று என காட்டுகின்ற அந்த நிலையிலையே அந்த மக்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்கின்ற கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.

இம்மலையக மக்கள் எங்கள் நாட்டிலே வாழ அவர்களுக்கு எல்லா உரித்தும் இருக்கின்றது. அவர்களிடம் இன்று நிலம் இல்லை ஆனால் வேறு யாரிடையோ நிலத்தை காப்பாற்ற போராடுகின்றார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லை அதனை பெற்றுக்கொடுக்க அரசியற் தலைமைகள் முனைந்தாலும் கூட இந்த அரசாங்கம் இடம்கொடுப்பதில்லை.

கொழுந்துகளை எடுத்து இந்த நாட்டின் வருமானத்தினை உயர்த்துகின்ற பொறுப்பு இம்மக்களுக்கு இல்லை என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டும்.

மலையக புத்தக ஆசிரியர் கூறினார், எங்கள் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக இருப்பதனால் அது தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வரலாற்று புத்தகத்தில் வரலாறாக வரவேண்டும் என்பதை அழகாக சொன்னார் அதனை நான் வரவேற்கின்றேன்.

எங்கள் மலையக மக்களின் தியாகம் அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியான நிலை இருந்தாலும் கூட இன்றைக்கும் அந்த மண்ணினுடைய விடுதலை என்பது நாங்கள் எல்லோரும் இணைந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களுக்காக உழைப்பதும், அவர்களுக்கான பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது தான் இந்த வரலாற்றை பார்க்கும் செய்யும் கடமையாக இருக்கும் என்பது வடக்கு கிழக்கில் வாழுகின்ற அத்தனை தமிழ்பேசும் மக்களுக்கு கடமை உரித்து இருக்கின்றது.

மலையகத்தில் வாழும் எம் உறவுகளை தூக்கிவிடுவதும் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றாக இணைந்து வெல்ல வைப்பதும் எமது கடமை என தெரிவித்தார்.