பேக்கரியில் ”கேக் ”விற்ற ஒரு சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இந்த விவகாரத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் மட்டக்களப்பில் உள்ள பேக்கரியில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கியவர் அதனை கொண்டுபோய் அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என பெயர் எழுதியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிட்ட பேக்கரிக்கு சென்று சி.சி.டிவி கமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த சிறுவன் கேக்கை மாத்திரம்தான் கொடுத்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை.
ஆனால், அந்த பேக்கரியில் வேலைசெய்த குற்றத்துக்காக அந்த சிறுவன் பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்படியே செல்லுமாக இருந்தால் இந்த நாடு அழிந்து போகும் என்றார்.