தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட தயாராக வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (07.10.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்றத்திலும் ஒற்றுமை இன்மையை காட்டிக் கொடுக்காமல் சுயலாப நோக்கில் செயற்படாமல் ஒற்றுமையே பலம் என்ற நோக்கில் களத்தில் இறங்குங்கள் செயலில் காட்டுங்கள்.
பாதிப்பின்விரக்தி நிலையில் வாழும் வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மைத் தமிழ் மக்களின் மனநிலையை விளங்கிக் கொண்டு தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து அரசியல் இருப்புக்கான குளிர்காய்தலை தவிர்க்க வேண்டும் உள்ளக நீதிப் பொறிமுறையில் நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய விடையம் மிக முக்கியமானது.
தமிழர் தரப்பு அதனை வலுப்படுத்தி சர்வதேச நீதிப் பொறிமுறைக்கான கதவினைத் திறக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடுவதன் மூலமே மாற்றத்தை கொண்டு வரலாம்.
இத்தகைய போராட்டம் நாட்கள் கழிய பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைப்பதற்கான வழியை திறக்கும்.
தனித்து ஓடினால் மக்கள் நன்றாக ரசிப்பார்கள் வாக்கு வங்கி அதிகரிக்கும் என நினைக்கும் பிற்போக்கு சிந்தனையை தவிர்த்து சகலரையும் ஒன்றினைத்து போராடினால் நீதிக்கான வழி திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.