இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடையங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் மத்திய குழு கூட்டம் இன்று(26.08.2023)இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘ஒரு ஆபத்தான நிலைக்கு இலங்கை சென்று கொண்டிருக்கின்றது போல் தெரிகிறது ஏனென்றால்,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அதே போன்று இலங்கை சீனாவுடன் வைத்திருக்கின்ற உறவு நிலமைகளை மோசமாக்கி கொண்டு வருகிறது என்று நினைக்கின்றேன்.
இலங்கையைப் பொருத்தமட்டில் மிக கவனமாக கையாள வேண்டும்.சீனாவின் உடைய ஆதிக்கம் இங்கு கூடிக் கொண்டு வருமாக இருந்தால் முக்கியமாக இராணுவ ரீதியான ஆதிக்கங்கள் கூடிக் கொண்டு வருமாக இருந்தால் அது இலங்கையில் இருக்கின்ற மக்களை பெரிய அளவில் பாதிக்கும்.
எங்களைப் பொருத்தமட்டில் நாங்கள் இந்தியாவின் தென் கரையிலே வசிக்கின்றோம்.இங்கு சீனா தனது பிரசங்கத்தை கூட்டுகின்ற முயற்சி எடுக்கிறது, அதாவது எங்களுடைய வடபுலத்திலே இதன் மூலம் அவர்கள் இந்தியாவினுடைய பாதுகாப்புக்கு அச்சத்தை கொடுத்து விடுவார்கள் என்கின்ற எண்ணப்பாடு இந்தியாவுக்கு வருமாக இருந்தால் அது எங்களைத்தான் கூடுதலாக பாதிக்கும்.
ஆகவே நாங்கள் இதில் மிகக் கவனமாக எங்களால் இயன்ற அளவுக்கு, இந்த ஆய்வுக்கு கப்பல் வருவது என்பது இந்தியாவைப் பொருத்தவரையில் அவர்களுடைய பாதுகாப்புக்கு அச்சம் வரக்கூடியதாக பார்க்கின்றார்கள் ஆகவே அதனை தவிர்ப்பதற்கான முழுமையான முயற்சியை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும்.
இலங்கை இந்திய உறவு ஆயிரக்கணக்கான வருடங்களாக இருக்கின்றது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருக்கின்ற தூரம் 24, 25 கடல் மயில் தூரத்துக்குள் தான் வருகிறது, ஆகவே இது மிக கவனமாக கையாள வேண்டிய விடயம் அவ்வாறு கையாளுவதன் மூலம் தான் இலங்கை பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.‘‘ என தெரிவித்துள்ளார்.