இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் ; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் இன்னமும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் ஏற்பாடு செயப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள் அந்நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பை நினைவுகூர்ந்திருக்கும்  பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் எட் டெவி, தமிழர்களுக்கு எதிரான தொடர் அடக்குமுறைகள் மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதில் நிலவும் பின்னடைவு என்பவற்றை மனதிலிருத்திச்செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனேடிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அவர்கள் இருவருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ், இருப்பினும் நம்பத்தகுந்த நல்லிணக்கப்பொறிமுறையொன்று இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான லூயிஸ் பிரென்ச், டோன் பட்லர், சாரா ஜோன்ஸ் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகியோர் தமிழ் மக்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதுடன் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு தாம் அரசியல் ரீதியில் மேற்கொள்ளவேண்டிய மேலும் பல விடயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.