ஊடக அடக்குமுறையின் கீழ் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறு இலங்கைக்கே உண்டு – ஜனா எம்.பி

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலையுருவாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ஊடக அடக்குமுறையின் கீழ் 50க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்ட வரலாறு இந்த நாட்டுக்கு மட்டுமே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஊடக ஒடுக்குமுறை சட்டத்தினை ஊடகங்கள் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளிவராமல் தடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கொண்டுவருகின்றது.

இந்த அரசாங்கம் நூறு வருடத்திற்கு இந்த நாட்டினை ஆளப்போவதில்லை என்பதை இவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

இன்னுமொரு கட்சி அடுத்ததேர்தலில்வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்போது தற்போது உள்ள அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்களை இதே சட்டத்தினைக்கொண்டு அடக்குவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றது.

தாங்கள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கமுடியாது என்பதை நினைவில்கொண்டு அவர்கள் செயற்படவேண்டும்.

மக்கள் தீர்ப்பு என்பதை அரசியல்ரீதியாக நாங்கள் அனைவரும் அறிந்த விடயம். 2019ஆம் ஆண்டு 69இலட்சம் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியான கோத்தபாய, அதே மக்களினால் இருப்பதற்கு இடமில்லாமல் துரத்தியடிக்கப்பட்டார். அந்த நிலைமை இன்னுமொருவருக்கு வராது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலையுருவாகும். ஏற்கனவேயிருந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயற்படவேண்டும்.

ஊடகம் என்பது இந்த நாட்டில் உள்ள செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஒரு சாதனம் என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.- என்றார்.