எமது உறவுகளின் இழப்பின் மேல் சத்தியம் செய்து ஒன்றாகப் பயணிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதே அரசாங்கம் கடந்த காலங்களிலே தமிழ்ப் போராட்ட இயக்கங்களைப் பிளவு படுத்தியது போல் மீண்டும் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்தி வலிமை இழந்தவர்களாக மாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 மே 18ம் திகதி எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்றது. அதனையொட்டிய ஒரு வார காலத்துக்குள் எமது உறவுகள் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பொதுமக்கள், போராளிகள் உயிர்நீத்துள்ளதாக முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இன்றுடன் 14வது ஆண்டை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் செல்ல முடியாத எமது மாவட்ட மக்களுக்காக இந்த நினைவேந்தலை நாங்கள் கல்லடி கடற்கரையிலே செய்துள்ளோம். எமது உறவுகளை நினைத்து அவர்களை நினைவு கூர்வதற்காக இங்கு வருகை தந்துள்ளோம்.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலம் முதல் எமது மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்ததன் காரணமாக எமது உரிமைகளைப் பெறுவதற்கும், சுயநிர்ணய உரிமையுடன் எங்கள் பிரதேசங்களில் வாழ்வதற்காகவும் அகிம்சை ரீதியாகப் போராடினோம். ஆனால், எமக்கு அந்த உரிமை கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக தொடர்ச்சியாக இனக்கலவரங்களின் ஊடாக எமது உறவுகளின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டதே தவிர நாங்கள் சுதந்திரமடைந்த மக்களாக வாழவில்லை என்ற காரணத்தினால் ஆயுதப் போராட்டத்திற்குள் நாங்கள் வலிந்து தள்ளப்படடிருந்தோம்.
அந்த ஆயுதப் போராட்டம் 2009 மே 18ம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், எமக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த வகையில் நாங்கள் தமிழ்த் தேசியப் பரப்பிலே ஜனநாயக, இராஜதந்திர ரீதியாக எமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
2001ம் ஆண்டு பல முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள், அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அரசியல் ரீதியாக எமது பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்வதற்கும், பாராளுமன்றத்திலே ஒற்றுமையாகப் பொரடுவதற்குமாக ஒன்றிணைந்தோம். ஆனால் 2009ல் ஆயுதப் பேராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஜதார்த்தமாகப் பேசப்போனால் நாங்கள் இன்று பல பிரிவுகளாகப் பிளவு பட்டு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கூட ஒற்றுமையாகச் செய்ய முடியாத ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இந்த நிலைமை தொடரக் கூடாது. ஏனெனில் நாங்கள் முள்ளிவாய்க்காலிலே இழந்த இழப்புகளுக்கு இதுவரை பதில் இல்லை. முள்ளிவாய்க்காலிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குக் கூட இதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்குக் கூட என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியாமல் இருக்கின்றது.
2009ற்குப் பின்னர் மூன்றாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்து கொண்டிருந்தாலும் கூட இறந்தவர்களுக்கோ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கோ ஒரு நீதி கிடைக்கும் சூழ்நிலையை இந்த நாட்டிலே உருவாக்கவில்லை.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலும் கூறுகின்றார். வடக்கு கிழக்கு தமிழ் எம்பிகளையும் அழைத்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டாலும் 13வது திருத்தம் எங்களது இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
எனவே நாங்கள் இந்த உறவுகளின் இழப்பின் மேல் சத்தியம் செய்து கொண்டு இனியாவது ஒன்றாகப் பயணிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நாங்கள் ஒன்றாகப் பயணிக்காவிட்டால்; கடந்த காலங்களிலே இதே அரசாங்கம் தமிழ்ப் போராட்ட இயக்கங்களை பிளவு படுத்தியது போல் மீண்டும் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்தி எங்களை வலிமை இழந்தவர்களாக மாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது.
தமிழ்ப் பிரிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற போது கூட நாங்கள் வலியுறுத்திக் கூறுவது ஒரு சர்வதேச மத்தியஸ்தத்துடன் தான் ஒரு பேச்சுவார்ததை நடக்க வேண்டும். சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடக்கும் போதே இதற்கு நியாயமான ஒரு தீர்வை சபைக்குக் கொண்டு வரும்.
இன்று நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் உள்நாட்டுப் பொறிமுறையினூடாக நடைபெறும் எந்தவொரு விசாரணை மூலமும் இழந்த எமது உறவுகளுக்கு ஒரு இழப்பிடோ நீதியோ உண்மையோ கண்டு பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. இதன் காரணமாகவே நாங்கள் கலப்புப் பொறிமுறை மூலமாக சர்வதேச தலையீட்டுடனான நீதியான விசாரணையைக் கோரி நிற்கின்றோம்.
அந்த வகையில் நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரே குரலாக எமது மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கும், இழந்தவர்களுக்கான இழப்பீட்டையும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்குமாக தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்று இன்றைய நாளில் நாங்கள் உறுதி பூணுவோம் என்று தெரிவித்தார்.