கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதி நிலை

கல்முனை மாநகர சபையின் விசேட கூட்டம் ஒன்று பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.

மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில், சபை சபாமண்டபத்தில் இடம் பெறவிருக்கும் இந்த விஷேட கூட்டத்தில், கல்முனை மாநகரில் இயங்கும் பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரும், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சருமான மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பெயரைச் சூட்ட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை விசேடமாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

அண்மையில் நடைபெற்ற மாநகர சபையின் 59 ஆவது மாதாந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இந்த பெயரிடல் விவகாரத்தை தமது உரையின் போது பிரஸ்தாபித்தார்.

எனினும் தமிழரசுக்கட்சி உறுப்பினரும் ரெலோ அமைப்பின் பிரதித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் உட்பட தமிழர் தரப்பு உறுப்பினர்கள் தற்போதய சூழ்நிலையில் இந்த விவகாரத்தைக்கைவிடுவதுடன், ஆறஅமர இரு தரப்பும் பேசி முடிவு செய்யலாமென ஆட்சேபித்ததையடுத்து, இந்த விடயத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது அமர்வு முடிவுறுத்தப்பட்டது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டுமென்ற கல்முனைவாழ் தமிழ் மக்களின் உயிர் மூச்சான முயற்சிகளுக்கு, பிரதேச முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் முட்டுக்கட்டையாக செயற்பட்டு வரும் விடயத்தால் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல் நீடித்துவரும் நிலையில், குறித்த பொது நூலக பெயரிடல் விவகாரம் மேலும் குழப்ப நிலையையும், தமிழ், முஸ்லிம் இன முறுகலையும் ஏற்படுத்திவிட வாய்ப்பாக அமைந்து விடலாமென அப்போது கூட்டத்தில் தமிழ் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

எனினும், விடாக்கண்டன் பாணியில் கல்முனை பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரை சூட்டியே ஆக வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் வரிந்து கட்டி நிற்பதாகவும், மர்ஹூம் மன்சூரின் புதல்வர் ரஹ்மத் மன்சூர் மாநகர சபையின் பிரதி மேயராக இருந்து வருவதும் விடாப்பிடி நிலைக்குக் காரணமெனவும் கூறப்படுகின்றது.

இதனிமித்தமே மாநகர சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்குள் பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரைச் சூட்டும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட வேண்டுமெனும் நோக்கில் நடைபெறவிருக்கும் சபையின் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதனால் கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதி நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கல்முனை மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் (ராஜன்) தவிர ஏனைய சகல கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் 10 தமிழ் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாநகர சபையின் விசேட கூட்டத்தை இரத்துச் செய்யுமாறுகோரி கடிதம் ஒன்றை மாநகர மோயரிடம் நேரில் சமர்ப்பித்துள்ளதாகவும், இக்கடிதத்தின் பிரதிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பு உறுப்பினருமான ஹென்ரி மகேந்திரன் தெரிவித்தார்.

வழமைக்கு மாறாக இந்த விசேட கூட்டம் நடத்தப்பட்டு உரிய தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் தமிழர் தரப்பினர் நீதிகோரி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முடிவுசெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கல்முனை மாநகரிலுள்ள முப்பதுக்கும் மேற்ப்பட்ட இந்து கிறிஸ்துவ ஆலங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்பாக இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொது அமைதிக்குப் பங்கமாகவும், கல்முனை மாநகரில் தமிழ், முஸ்லிம் இனமுறுகலுக்கு வழிவகுப்பதாகவும் அமையவுள்ள குறித்த பெயர் மாற்றத் தீர்மானத்தை அமுல் நடத்தாது தடுக்குமாறும், மூவின மக்கள் வாழும் கல்முனையிலமைந்துள்ள பொது நூலகம் அதேபொதுவான பெயரிலேயே இயங்க ஆவன செய்யுமாறும் குறித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கல்முனை மாநகரை களேபர பூமியாக மாற்றாது சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டுமென்பதே இன்றைய நிலையில் பலரதும் அவாவாகும்.