கிழக்கில் ஆயிரம் பேருக்கு புலமைப்பரிசில் பாகிஸ்தான் வழங்குவதன் நோக்கம் என்ன? செல்வம் எம்.பி சபையில் கேள்வி

 

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள 1000 பேருக்கு மாத்திரம் புலமைப்பரிசில்களை வழங்குவதன் நோக்கம் என்ன? அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாமல் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவது தவறான நிலைமையை தோற்றுவிக்கும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு அல்ல என ஜனாதிபதியும் அரசாங்கமும் குறிப்பிடுகின்ற நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயித்துள்ளது. தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இழுபறியால் நாட்டு மக்களும் வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் நடக்குமா, அல்லது பிற்போடப்படுமா என்பதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதனை விடுத்து இரு தரப்பினரும் முரண்பட்டுக் கொண்டிருந்தால் தேர்தல் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைவடையும்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். சர்வதேசமும் இதனையே வலியுறுத்துகிறது. 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகள் நிறுவப்படும் என அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்குகிறது. ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வது முழுமையான தீர்வாக அமையாது. அதிகார பகிர்வு என்பது அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓர் ஆரம்பப் புள்ளியாக கருதப்படும். மத்திய அரசாங்கத்திடம் உள்ள பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட நிறுவன மட்ட அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கப்பட வேண்டும்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் வழங்கல் திட்டங்களை முன்னெடுக்கின்றன. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் புலமைப்பரிசில் வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கத்துடன் ஒன்றிணையாமல் முன்னெடுத்துள்ளதன் நோக்கம் என்ன? நாட்டில் மூவின மக்கள் வாழ் கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரதேசத்தில் மாத்திரம் புலமைப்பரிசில் வழங்குவது தவறான நிலையை தோற்றுவிக்கும். ஆகவே இந்த விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் – என்றும் கூறினார்.