இருதரப்பு உறவுகளை வலுவாக்க இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த திங்களன்று கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படை தளபதி நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது , பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியினை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தினை வழிநடத்திச்செல்வதில் இலங்கையின் வகிபாகமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை , இந்திய கடற்படைத் தளபதி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்ததோடு , அவருடனான சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் இரு நாடுகளினதும் பாதுகாப்பு படையினரிடையில் தற்போதுள்ள உறவினை மேலும் வலுவாக்குவதற்கான மார்க்கங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.