டெலிகொம் நிறுவனத்தின் உரிமத்தை வெளிச்சக்திகளுக்கு விற்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா? – சஜித் கேள்வி

ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து வெளி நிறுவனத்திற்கு மறுசீரமைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நிலையியற் கட்டளை 27 /2 இன் கீழ் கேள்வி நேரத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் புதிய முகாமைத்துவ திட்டத்தின் அடிப்படையில் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனங்களின் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும். என்றாலும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை அதிக இலாபம் ஈட்டக்கூடிய முறைமைக்குச் செல்ல வேண்டும். பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட அலகு மூலம், டெலிகொம் மற்றும் காப்புறுதி நிறுவனம் உட்பட அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், குறித்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஏலத்தை சமர்ப்பித்த நிறுவனங்கள், அவர்களின் தகுதி மற்றும் டெலிகொம் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் அந்த அறிக்கையையும் சபைக்கு முன்வைக்க வேண்டும். இந்த அறிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்தாது மறைத்து வைத்திருக்க வேண்டாம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் 9.6.2023 திகதியிட்ட அறிக்கையின் பிரகாரம், டெலிகோம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், டெலிகொம் நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து வெளி நிறுவனத்திற்கு மறுசீரமைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமா என கேட்கிறேன்.

காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கிய பிறகு கிடைத்த இலாபத்தை விட,அரசாங்க உடைமையின் போது அதிக இலாபம் ஈட்டியுள்ளமை இராஜாங்க நிதி அமைச்சின் இலாப நஷ்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது.எனவே இதன் பின்னணியில் உள்ள காரணங்களை அரசாங்கம் இனம் கண்டுள்ளதா என கேட்கிறேன்.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 8 பில்லியன் பெறுமதியான விசுபம்பாய சொத்துக்களை 4 பில்லியனுக்கு விற்க தயாராகி வருகின்றனர்.இதற்காக ஒரு பகுதியை குறைந்த விலைக்கு விற்க தனி தரகர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு குறைந்த பெறுமதிக்கு விற்பனை செய்ய எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.