இந்தியாவின் முக்கியத்துவம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். முள்ளிவாய்க்கால் அவலம் நமது அரசியல் புரிதல் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் பலவாறான கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்த பின்புலத்தில் ‘இந்தியா புலிகளை அழித்ததா’ என்னும் தலைப்பில், தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் காலச்சுவடு சஞ்சிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் பல அரசியல் நண்பர்கள் திருப்தியடையவில்லை. பலர் எனது நட்பையும் துண்டித்துக் கொண்டனர். இன்று காலம் 13 வருடங்களாக நகர்ந்துவிட்டது. இப்போது பலரும் புதுடில்லியுடன் எவ்வாறு நெருங்குவதென்று உரையாடிவருகின்றனர். ஒரு காலத்தில் இனிப்பாக நோக்கப்பட்ட இந்தியா என்னும் சொல், பின்னர் கசப்பானது. விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய படைகளுடன் மோதிய பின்னணியில்தான், அது கசப்பானது. அன்றைய சூழலில், இந்தியாவுடன் இணைந்துதான் பயணிக்க வேண்டுமென்று கூறியவர்கள் (துரோகிகளாக்கப்பட்டு) தூற்றப்பட்டனர். ஆனால் காலம் அனைத்தையும் செல்லாக்காசாக்கிவிட்டது. காலம் வலியதென்பார்கள். காலம் நமக்கு தரும் அனுபவங்களை எந்தவொரு ஏட்டறிவும் தந்துவிடப்போவதில்லை.
நான் இப்போது, இந்தியா தொடர்பில் பேசுவதற்கு ஒரு வலுவான காரணமுண்டு. அதாவது, ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு தொடர்பில் பேசிவருகின்றார். தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து வந்தால் தான் பேசுவதற்கு தாயராக இருப்பதாகவும் கூறுகின்றார். தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வழமைபோல் சமஸ்டியை உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் கட்சிகள் இவ்வாறுதான் பேசுமென்பதும் ரணில் அறியாத ஒன்றல்ல. ஏனெனில் தற்போதுள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகளில் ரணில் விக்கிரமசிங்களவிற்கு தமிழர்களின் பிரச்சினையை வேறு எவரும் அறியார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்திலிருந்து, ஒஸ்லோ பேச்சுவார்த்தை வரையில் பயணம் செய்தவர் ரணில். எனவே ரணில் விக்கிரமசிங்க புதிதாக தெரிந்துகொள்வதற்கு எதுவுமில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் தமிழ் கட்சிகளை பேச வருமாறு அவர் அழைக்கின்றார்.
தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு எளிய உண்மையுண்டு. அதாவது, தமிழர்களும் சிங்களவர்களும் உரையாடி பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால், தேசிய இனப்பிரச்சினையன்பது, ஒரு பழம் கதையாகியிருக்கும். அரசியல் தீர்வென்பது எப்போதோ முடிந்த காரியமாகியிருக்கும். கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக, தீர்க்க முடியாமல் இழுபட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினைக்கான தீர்வை, தான் அடுத்த ஆண்டுக்குள் காணப்போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். இது தொடர்பில் எந்தவொரு கேள்வியுமில்லாமல் சமஸ்டியடிப்படையில் பேசுவோமென்று தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்றனர். செல்வநாயகம் காலம் தொடக்கம், பிரபாகரன் காலம் வரையில், பல பேச்சுவார்த்தைகளை நாம் கண்டிருக்கின்றோம். இந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு பிரதான அம்சமுண்டு, அதாவது, சிங்களவர்களும் தமிழர்களும் பேசி பிரச்சினைகளை தீர்க்க முற்பட்ட அனைத்து சந்தர்பங்களும் தோல்வியடைந்திருக்கின்றது.
இந்த இடத்தில்தான் மூன்றாம் தரப்பின் தேவை உணரப்பட்டது. தமிழர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பினர் தலையீடு செய்த இரண்டு சந்தர்பங்களுண்டு. இதனை இரண்டு காலகட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, இந்திய தலையீட்டு காலம். இரண்டு, நோர்வேயின் மத்தியஸ்த காலம். முதலாவது பிராந்தியரீதியான தலையீடாகும். இரண்டாவது மேற்குலக தலையீடாகும். ஏனெனில், நோர்வேயென்பது மேற்குலக சமாதான முன்னெடுப்புக்களுக்கான முகவர் முகமாகும். இந்த இரண்டு தலையீடுகளுக்கும் ஒரு ஒத்த இயல்புண்டு. இரண்டு தலையீடுகளுமே, தமிழர்கள் ஆயுதரீதியான பலத்துடன் இருந்த காலத்தில் இடம்பெற்ற தலையீடுகளாகும்.
அதே வேளை, ஒரு அடிப்படையான வேறுபாடுமுண்டு. அதாவது, இந்தியா முதலில் தமிழ் இயக்கங்களை ஆயுதரீதியில் பலப்படுத்தி, அதன் பின்னரே நேரடியாக தலையீடு செய்தது. ஆனால் மேற்குலகோ, ஒரு எல்லைவரைக்கும் விடுதலைப்புலிகளை, இயங்குவதற்கு அனுமதித்துவிட்டு, அதன் பின்னரே தலையீடு செய்தது. அதாவது, விடுதலைப்புலிகள் இலங்கையின் இராணுவத்திற்கு சவால்விடுக்கக் கூடிய நிலையிலிருந்த காலத்தில்தான், நோர்வேயின் தலையீடு நிகழ்ந்தது. இதில் பிறிதொரு விடயமுண்டு. அதாவது, ராஜீவ்காந்தியின் கொலைக்கு பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. ஆனால் மேற்குலகத்தில் தடைசெய்யப்படவில்லை. 1990களுக்கு பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பு ஜரோப்பிய ஜனநாயக சூழலை பயன்படுத்தியே தங்களை வளர்த்துக் கொண்டது. ஆரம்பத்தில் தமிழ் நாடுதான், விடுதலைப் புலிகளுக்கான பின்தளமாக இருந்தது. பின்னர், அது ஜரோப்பாவாக மாறியது. இந்த பின்புலத்தில் நோக்கினால், 90களுக்கு பின்னரான விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு மேற்குலகத்தின் நெகிழ்வான அணுகுமுறையே பிரதான காரணமாகும். 1997இல், அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக தடைசெய்த போதிலும் கூட, 2006இல்தான், ஜரோப்பிய ஒன்றியம் புலிகளை தடைசெய்தது. கனடாவும் 2006இல்தான் தடைசெய்தது. அமெரிக்காவில் புலிகள் தடைசெய்யப்பட்ட போதிலும் கூட, அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையின் கடைக்கண் பார்வைக்குள் இருக்கும் கனடாவில், விடுதலைப் புலிகள் தடைசெய்யப்படவில்லை. அமெரிக்கா எண்ணியிருந்தால், கனடாவிலும் விடுதலைப் புலிகளை ஆரம்பத்திலேயே தடைசெய்திருக்க முடியும்.
இந்த பின்னணியில் நோக்கினால், மேற்குலகம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, ஒரு எல்லைவரையில் வளர்வதற்கு அனுமதித்திருந்தது. இதற்கு பிறிதொரு காரணமும் உண்டு. அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் கருத்தியல்ரீதியில் மேற்குலகிற்கு எதிரான நிலைப்பாடுடையதல்ல. ஒரு வேளை விடுதலைப் புலிகள் அமைப்பானது, ஒரு இடதுசாரி இயக்கமாக தன்னை முன்னிறுத்தியிருந்தால், மேற்குலகம் விடுதலைப் புலிகளுக்கு இவ்வாறான சலுகையை வழங்கியிருக்காது. இந்த பின்புலத்தில் நோக்கினால், தங்களுடைய நெகிழ்வான அணுகுமுறைகளால் வளர்சியடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதற்கானதொரு முயற்சியாகவே நோர்வேயின் தலையீட்டை நாம் நோக்க வேண்டும். அப்படி நோக்குவதுதான் சரியாகவும் அமையும். அதே வேளை இந்திய தலையீட்டிற்கும் நோர்வேயின் முகவர் தலையீட்டிற்கும் இடையில் ஒரு கொள்கைசார்ந்த உடன்பாடுண்டு. அதாவது, இரண்டு தலையீடுகளுமே தமிழ் மக்களுக்கான தனிநாட்டை ஆதரிக்கும், அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. மாறாக அதற்கு மாற்றான அரசியல் தீர்வொன்றை காண்பதற்கான தலையீடாகவே இருந்தது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, நோர்வேயின் பெறுமதி இல்லாமல் போய்விட்டது. இப்போது ரணில்-பிரபா உடன்பாடு ஒரு விடயமல்ல. ஏனெனில் பிரபாகரனும் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லை. ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இப்போதும் எப்போதும் விடயமாகவே இருக்கும். ஏன்? ஏனெனில், அது இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வலியுறுத்திவருகின்றது. அதே வேளை, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசிவரும் ஒரேயொரு நாடும் இந்தியா மட்டும்தான்.
எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்படும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாதது. தவிர்க்கவும் கூடாது. ஆனால் இந்த விடயத்தை சரியாக புரிந்துகொண்டு தமிழ் தேசிய கட்சிகள் செயற்படவில்லை. ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில், சம்பந்தன்- சுமந்திரன் தரப்பு, திட்டமிட்டே இந்தியாவை தவிர்த்துக்கொண்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம், இந்தியாவிடம் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள். இதன் காரணமாகவே, சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்தர்பத்தில், ஒரு முறை கூட, புதுடில்லிக்கு பயணம் செய்யவில்லை. இறுதியில் அரசியல்யாப்பு முயற்சிகள் படுதோல்வியடைந்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மேற்பார்வையில் விடயங்களை கையாண்டிருந்தால், இருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி சென்றிருக்கலாம். முன்னர் செய்த அதே தவறையே இப்போதும் தமிழ் தேசிய கட்சிகள் என்போர் செய்கின்றனர். இங்கு கருத்தூன்றி கவனிக்க வேண்டிய விடயமொன்றுண்டு. அதாவது, சமஸ்டியடிப்படையில் பேசுவதானால் இந்தியாவின் தலையீடு நிகழாது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலிருந்து முன்னோக்கி பயணிப்பதாயின், இந்தியாவினால் தலையீடு செய்ய முடியும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கர், கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, முன்னர் ஒரு முறை இதனை கூறியுமிருக்கின்றார்.
ஏன் மூன்றாம் தரப்பொன்றின் தலையீடு கட்டாயமானது. இந்தக் கட்டுரை மூன்றாம்தரப்பு என்பதால் இந்தியாவை மட்டுமே குறிப்பிடுகின்றது. இந்தியாவல்லாத எந்தவொரு நாட்டின் தலையீடும் தமிழர் விடயத்தில் சாதகமான பங்களிப்பை வழங்க முடியாது. பங்களிப்பு என்பதற்கும் சாதகமான பங்களிப்பு என்பதற்குமான வேறுபாடு கனதியானது. முன்னர் இடம்பெற்ற மூன்றாம் தரப்பின் தலையீட்டிற்கும் இப்போது இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடும் இந்திய தலையீட்டிற்கும் அடிப்படையான வேறுபாடுண்டு.
இந்த கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, முன்னர் இடம்பெற்ற இரண்டு தலையீடுகளும் தமிழர்கள் ஆயுத பலத்துடனிருந்த காலத்தில் இடம்பெற்ற தலையீடுகளாகும். அந்தத் தலையீடுகளின் போது, தமிழர்களுக்கு வலுவான குரலிருந்தது. தமிழர்களால் விடயங்களை அழுத்தி வலியுறுத்த முடிந்தது. ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழானது. தமிழர்கள் முற்றிலும் பலமற்றவர்களாக இருக்கும் சூழலில்தான் கொழும்புடன் பேசவேண்டியிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் சிங்கள தரப்பே எப்போதும் பலமாக இருக்கும். தமிழர்கள் விடயங்கள் கூறினாலும் அதனை செய்யவேண்டுமென்னும் நிர்பந்தம் அவர்களுக்கில்லை. அப்படியிருப்பதாக சிலர் கூறலாம். ஆனால் உண்மையான நிலைமை அப்படியல்ல. தமிழர் பிரச்சினைக்கான தீர்வை கண்டால்தான், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவோமென்று எந்தவொரு நாடும் நிபந்தனைகளை முன்வைக்கவில்லை. அப்படி அவர்கள் கூறப்போவதுமில்லை. இராணுவத்தை குறைக்குமாறு நாடுகள் நிபந்தனைகளை முன்வைத்ததாக நம்மில் சிலர் கூறிக்கொண்டிருக்கும் போதுதான், பொருளாதார நெருக்கடிக் காலத்தில் கூட, பாதுகாப்பிற்கு அதிக நிதியொதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அரசுகளுக்கிடையிலான உறவுகளை மிகவும் எழிமையாக விளங்கிக்கொள்வது தவறானது.
பேச்சுவார்த்தைகளின் போது, ஒரு தரப்பு மிகவும் பலவீனமாக இருந்தால், ஒரு மூன்றாம்தரப்பிடமிருந்து அதிகாரத்தை கடன்பெறும் அணுகுமுறையுண்டு. இது ஒரு முரண்பாட்டு தீர்விற்கான அணுமுறையாக சொல்லப்படுகின்றது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் கூறுவதானாலும் கூட, பலவீனமான நிலையிலிருக்கும் தமிழர்கள், ஒரு மூன்றாம்தரப்பின் மேற்பார்வையின்றி, விடயங்களை அணுகுவது புத்திசாலித்தனமல்ல. இந்த சந்தர்பத்தில், தமிழ்கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவின் மத்தியஸ்தத்தை ஒருமித்து கோரவேண்டும். ஏற்கனவே இந்திய பிரதமரின் தலையீட்டை கோரி, கடிதம் அனுப்பியிருக்கும் கட்சிகள், இந்தவிடயத்தில் தடுமாற வேண்டியதில்லை. அந்தக் கடிதத்தில் கோரியது உண்மையாயின், இப்போது குறித்த ஆறு கட்சிகளும் கருத்தொருமித்து, இந்தியாவின் மத்தியஸ்தத்திற்கான அழைப்பை முன்வைக்க வேண்டும். ஆனால் மத்தியஸ்தத்தின் அடிப்படையாக இந்திய-இலங்கை ஒப்பந்தமே இருக்க வேண்டும். முன்னர் சம்பந்தன்-சுமந்திரன் செய்த தவறையே மீளவும் செய்தால், செய்ய அனுமதித்தால், மீளவும் சமஸ்டியுமில்லை, தீர்வுமில்லையென்னும் நிலைமையே ஏற்படும். அப்படியொரு நிலைமைதான் தொடர்ந்தும் ஏற்பட வேண்டுமென்று, தமிழ் கட்சிகளின் தலைவர்கள் விரும்பினால், செல்வநாயகம் கூறியது போன்று தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தமிழர்கள் என்பதால், ஏழை மக்கள் தொடர்பிலேயே இந்தக் கட்டுரை குறிப்பிடுகின்றது. கட்சிகளின் தலைவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை ஏனெனில், அவர்களிடம் கோடிகள் உண்டு.