வடகிழக்கு மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் -ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை போக்குவரத்து சேவைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கும் மன்னாருக்கான ரயில் சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்கள் தங்கள் மனங்களில் நினைவு கூரும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்கள் வெள்ளத்துடன் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த விடயத்தில் நல்லிணக்க சமிக்ஞையாக ஜனாதிபதி செயற்பட்டமை வரவேற்கத்தக்கது.

சில இடங்களில் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெரியளவில் நெருக்கடி கொடுக்காது நல்லிணக்க அடிப்படையில் நடந்துகொண்ட ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வரவு செலவு விவாதத்தில் சில முக்கிய விடயங்களை கூற வேண்டியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை போக்குவரத்து சேவைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கும் மன்னாருக்கான ரயில் சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும்.

அத்துடன் வெளிநாடுகளில் மீனவர்கள் இலங்கை மீனவர்கள் கைதாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இங்கு கைதாகும் போது அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் உயர்ஸ்தானிகராலயம் செய்கிறது. அதேபோன்று இலங்கை மீனவர்கள் பிடிபடும் போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை சட்டத்திற்கு முரணான வகையில் வெளிநாடு செல்லும் நோக்கில் சென்று இந்தியா போன்ற நாடுகளில் பல வருடங்களாக சிறையில் இருப்பவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றேன் என்றார்.