நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் கொடுத்த கட்டளையை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார் சபை முதல்வர் அதன் அடிப்படையில் உத்தேச நிகழ் நிலை காப்புச் சட்டத்தில் காணப்படும் பல சரத்துக்கள் எவ்வாறு அரசியலமைப்புக்கு அமைவாக மாற்றப்பட வேண்டும் என்றும் அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் முழுமையாக நிறைவேற்ற முடியும் என்றும் அவ்வாறு முடியாவிட்டால் நீதிமன்றம் குறிப்பிட்ட விடையங்களை மாற்றியமைத்து சாதாரண பெரும்பாண்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
தற்போதைய அரசாங்கம் தமக்கு எதிரான மக்களின் கருத்துக்களை மற்றும் மக்கள் போராட்டங்களை கண்டு மிக அஞ்சுகின்றது காரணம் அடுத்து வர இருக்கும் தேர்தலை இலக்காக கொண்டு ஆட்சி தொடர்பாக சாதாரண பெரும்பாண்மை மக்களுக்கு சமூக ஊடகங்களினால் உடனுக்குடன் அரசாங்கததின் பலவீனங்கள் வெளிக் கொண்டு வரப்படுகின்றன இதனால் தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால் சமூகவலைத் தளங்களை அடக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவருகின்றனர்.
இது ஊடக அடக்குமுறைக்கு அப்பால் மக்களின் ஜனநாயக குரல் வளையை நசுக்கி அரச சர்வாதிகாரத்தை மேலோங்கச் செய்யும்.
நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேறினால் நாட்டு மக்களும் சரி ஆளும் கட்சி தவிர்ந்த எதிர்க்கட்சிகள் அனைவரும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறக்கவும் கையை அசைக்கவும் முடியும் மாறாக அரசின் தவறுகளை விமர்சித்தால் சிறைச் தண்டனையுடன் கூடிய சொத்துக்களை பறி கொடுத்தல் மற்றும் தண்டப்பணம் சொலுத்துதல் போன்றவற்றை எதிர் கொள்ள நேரிடும்.
இலங்கைத் தீவு ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு என்ற பெயரில் மக்களின் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை அடக்கும் கொடூர சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றுவதை தடுக்க மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை.
பெரும்பான்மை சிங்கள மக்களை விட ஏனைய இனங்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு பாரிய ஆபத்து காத்திருக்கின்றது தமிழர்களின் தாயகத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஆயுதங்கள் இல்லாமல் இனத்தின் இருப்பை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் நிலையையும் இழக்கும் அபாயம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.