போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் என  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் விநியோகம் மற்றும் பாவனை அதிகரிப்பை கட்டுப்படுத்த உறுதியான இறுதியான வழி கிராமங்கள் தோறும் சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதே ஆகும்.

வடக்கு மாகாணத்தில் இளையோரை குறி வைத்து ஐஸ் போதை மற்றும் ஹெரோயின் போன்ற சட்டவிரோத போதைப் பொருட்கள் ஆரம்பத்தில் இலவசமாகவும் பின்னர் பணத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றது இதனால் பல இளையோர் பாதிக்கப்பட்டு சீரழிந்து வருகின்றனர் என்பதை வெளிவரும் செய்திகளும் வெளிவராத புள்ளி விபரங்களும் ஆதாரப்படுத்துகின்றன.

இவ்வாறான போதைப் பொருட் பாவனையை தடுப்பதற்கு முழுமையான செயல் நடவடிக்கைகளை அதிகாரத் தரப்பான காவல் துறை கட்டுப்படுத்த தவறுகின்றமையே சட்டவிரோத போதைப் பாவனை தீவிரம் பெறுவதற்கு காரணமாகின்றது.

சில கிராமங்கள் தாங்களாக உணர்ந்து சில விழிப்புக் குழுக்களை தங்கள் கிராமத்திற்கு உருவாக்கி கட்டுப்படுத்தி வருகின்றனர் ஆனால் பெரும்பான்மையான கிராமங்களுக்கு இவ்வாறான குழுக்கள் அமைக்கப்படவில்லை.

எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள பிரதேச செயலாளர்களுக்கு தீர்மானம் ஒன்றை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு கிராமங்களுக்கும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடக்கி சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதன் மூலமே சட்டவிரோத போதைப் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

மாவட்டச் செயலாளர்கள் விரைவாக இவ்வாறான விழிப்புக் குழுக்களை அமைப்பதை நடைமுறை செய்ய வேண்டும். இதுவே யுத்தத்தால் அழிந்து போன எம் தேசத்தை போதையால் மீண்டும் அழிந்து போக விடாமல் பாதுகாக்கலாம்.