போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் புனர்வாழ்வு சட்டமூலம் – எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில்  உள்வாங்கப்பட்டுள்ள தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகாரர்கள். முறையற்ற மற்றும் வன்முறையில் ஈடுபடும் தரப்பினர், ஆகிய சொற்பதங்களை நீக்கி கொள்வீர்களா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்ள ஒருசில சொற்பதங்களை நீக்குவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்படும் என்பதையும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை மீளப்பெற்றுக் கொள்ளவில்லை,சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் பிற்போடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இன்று (05) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என எதிர்க்கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இந்த சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என நம்புகிறேன்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சபைக்கு மீண்டும் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகிறேன்.

இந்த சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகார்கள்,முறையற்ற மற்றும் வன்முறைகளில் ஈடுப்படும் நபர் என்ற சொற்பிரயோகங்கள் தொடர்பில் எமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

சுதந்திர மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அமைய போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்களை அடக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆகவே இந்த சட்டமூலம் மக்களாணை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது.

போதைப்பொருளை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும்.ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் மக்கள் உரிமைகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டாம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்திற்கு அமைய சட்டமூலத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்.

ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இளைஞர்களின் போராட்ட உரிமைகளை முடக்க வேண்டாம்.ஆகவே இந்த சட்டமூலத்தில் உள்ள குறைப்பாடுகளினால் தான் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதற்கமைய இன்றைய தினம் சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவில்லை.

ஆகவே குறைபாடுகள் இல்லாமல் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற எண்ணக்கருவிற்கு அமைய சட்டமூலத்தை சமர்ப்பித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இன்று,நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல,சபைக்கு சமர்ப்பித்துள்ள சட்டமூலத்தை மீளப் பெற்றுக் கொள்ளவில்லை,சட்டமூலத்தின் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

10 வருட காலத்திற்கு முன்னர் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை அப்படையாக கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.இந்த சட்டமூலத்தில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்துவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கை சட்ட வரைபுக்கு உட்படாத வகையில் முன்னெடுக்கப்படுகிறது. புனர்வாழ்வளித்தல் நடவடிக்கை சட்ட வரைபுக்கு உட்பட்ட வகையில் அமைய வேண்டும் என்பதற்காக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகாரர்கள்,முறையற்ற மற்றும் வன்முறையில் ஈடுப்படும் தரப்பினர்,ஆகிய சொற்பதங்களை நீக்கி கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்ள ஒருசில சொற்பதங்களை நீக்குவதாக உயர்நீதிமன்றத்திற்கு  அறிவித்துள்ளோம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம் என்றார்.