மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காமல் நாணய நிதிய கடனுதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச ,சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை  உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இவ் உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இலங்கைக்கு கிடைக்கின்றது இதனால் சிறிது காலம செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி வெடிப்புக்களும் நடைபெறுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.