வருமான வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

வருமான வரி  திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அசாதாரண வரி அறவீட்டை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தா விட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரச பல் வைத்தியர்கள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மருத்தவ பீட ஆசிரியர்கள் சங்கம்,இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களின் பிரதிநிதிகள்  இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதியோரத்தில் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான வகையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் கூறுகையில்,

வருமான வரி வசூலிப்பு சட்டத்தில் வைத்தியர்கள் உள்ளிட்ட முக்கிய தொழிலில் ஈடுபடுவோருக்கு பாதிப்பான வகையிலேயே திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. மாதத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களுக்கு வரிகள் அறவிடப்படவுள்ளன. இதனூடாக விசேட வைத்தியர் ஒருவர் வருடத்திற்கு இரண்டு முதல் இரண்டரை மாத சம்பளத்தை வரியாக செலுத்தும் நிலைமை ஏற்படுகின்றது.

வரி அறவீடுகள் அனைவருக்கும் ஏற்றால் போன்று நியாயமானதாக இருக்க வேண்டும். பண வீக்கம் அதிகரித்து, வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு வரி திருத்தங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கெகாள்ளள முடியாது. இதனால் அசாதாரண வரி அறவீட்டை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தா விட்டால் நாங்கள் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.