இலங்கையில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநாகர சபையின் 47 ஆவது பொதுச் சபை அமர்வு மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபை சபா மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசைக் கோருவதற்கான பிரேரணையை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) பிரதி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் சபையில் முன்மொழிந்தார்.
இந்தப் பிரேரணையை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்திரணி ஆரிகா காரியப்பர் வழிமொழிந்தார்.
பிரேரணைக்கு ஆதரவாக சபை அமர்வில் கலந்து கொண்ட பல உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஒரு உறுப்பினர் மட்டும் இதற்கான மாற்றுக்கருத்தை சபையில் தெரிவித்தார்.
கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் சபையில் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“நாட்டில் நான்கு தசாப்தங்களுக்க மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளுக்கு சவாலாக மக்களை குறிப்பாக சிறுபான்மை மக்களைக் பெரிதும் பாதித்து வருகின்றது.
இந்த படுபாதக சட்டத்தினால் முதன் முதலில் எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்த்தர்களான தங்கத்துரை, குட்டிமணி போன்றோரே தண்டிக்கப்பட்ட துயரத்தையும் நினைவு கூர வேண்டும்.
அன்று தமிழ் மக்கள் மீதும், நேற்று முஸ்லிம் மக்கள் மீதும், இன்று சிங்களவர்களையும் சேர்த்து முழு மக்கள் மீதும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மிக மோசமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
இக் கொடூர சட்டத்தை முற்றாக இரத்துச் செய்வதற்கு நாம் உரத்துக் குரல் கொடுப்பதுடன் இதற்கென சர்வதேச அழுத்தங்கள் வலுப்பெறவும் நாம் கோர வேண்டும்.
குறிப்பாக தேர்தல் ஒன்றுக்காகவும், சிறுபான்மை மக்களைப் பழிதீர்ப்பதற்காகவும் அரசு கையிலெடுத்துள்ள இக்கொடூர சட்டத்தை நீக்குமாறு கோரும் தீர்மானங்களை சகல உள்ளுராட்சி சபைகளும் நிறைவேற்றி அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் அறை கூவல்விடுக்கின்றேன்” என்றார்.