வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரைக்கு சிலை – தற்காலிக தடையை நீக்கிய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்
வெலிக்கடை சிறைச்சாலையில் பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு, வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதைத் தடுக்கும் வகையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தற்காலிகத் தடை உத்தரவு இன்று 05.08.2026 நீக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலை அமைப்பு தொடர்பில், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் ஏற்பாட்டாளருமான கந்தசாமி சதீஷுக்கு எதிராக வல்வெட்டித்துறை காவல்துறையினர் கடந்த ஜூலை 22ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, மேலதிக ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்காக காவல்துறையினர் 14 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தனர்.
எனினும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106ஆம் பிரிவின்படி, தற்காலிகத் தடை உத்தரவை 14 நாட்களுக்கு மேல் நீடிக்க முடியாது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் காவல்துறையினர் போதுமான ஆதாரங்களையோ ஆவணங்களையோ சமர்ப்பிக்காத காரணத்தால், முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை உத்தரவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று நீக்கியுள்ளது.
இதன் மூலம், குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.