தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தீர்வை வலியுறுத்தவேண்டிய தருணம் இது; இணைந்து பயணிக்க அழைக்கிறார் ஜனா எம்.பி.

தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தவேண்டிய காலம் என்பதனால் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா).

இந்தியா தனது பாதுகாப்பையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும் மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 37ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று மட்டக் களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சிறிசபாரத்தினம் ஒற்றுமையாக நாங்கள் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாரோ அதே நோக்கத்துடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒற்றுமையை முன்னிறுத்தி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலமிருந்து இன்று வரையுள்ள கட்சியாக ஓர் இயக்கமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இருக்கின்றது. நாங்கள் எங்கள் தலைவரை இழந்தாலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்காக நாங்கள் ஒன்றாகச் செயல்படுவோம் என்று உறுதியாக செயற்பட்டு வருகின்றோம். 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் எந்தப் பலமும் இல்லாத நிர்க்கதியாக நிற்கும் இந்தவேளையில் நாங்கள் பலமாக ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் காணப்படுகின்றன. இன்று வடக்கு-கிழக்கில் ஆயுத பலம் இல்லாத காரணத்தினால் இலங்கை அரசாங்கத்தினால் எமது நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் வடக்கு-கிழக்கு பகுதிகளில் சிங்கள பௌத்தமயமாக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையின் நேற்று அதிகாரங்கள் இல்லாமல் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றது. ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர்கள் தாங்கள் நினைத்தவற்றைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கின் தையிட்டி பகுதியிலேயே விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று எமது கிழக்கு மாகாணத்தில் உள்ள புராதன இடங்களான கிண்னியா, திருக்கோணேஸ்வரம், குசனார்மலை போன்ற பகுதிகளிலும் வடக்கில் வெடுக்குநாறி, குருந்தூர் மலை, நாவற்குழி போன்ற இடங்களில் பௌத்த மதம் என்று கூறிக்கொண்டு கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இந்திய அரசாங்கமானது 13ஆவது திருத்ததின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபையின் முழு அதிகாரத்தையும் பரவலாக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்ற அழுத்தத்தை வழங்கவேண்டும். ஆனால், எங்களுக்குள் ஒற்றுமையில்லை. சரத் வீரசேகர, விமல் வீரவன்ஸ போன்ற இனவாதிகள் 13ஆவது திருத்த சட்டமும் வேண்டாம் அதன் ஊடாக வந்த மாகாண சபையும் வேண்டாம் என்கிறார்கள். வடக்கு-கிழக்கில் அதே கொள்கையுடன் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் செயற்படுகின்றது. ஆனால், இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மாகாண சபையின் முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாகயிருக்கின்றோம்.

நாங்கள் இன்று ஒன்றாகயிருக்க வேண்டிய காலம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட இன்று பிரிந்து கிடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாகி நாங்கள் எமது உரிமைகளை பெறுவதற்காக போராடவேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை அனைத்து தமிழ்த் தரப்பினரும் உணர வேண்டும். மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சியை வளர்ப்பதற்காக மக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து விதமான அட்டூழியங்களையும் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும். சிறிசபாரத்தினம் 1984ஆம் ஆண்டு ஜேர்மனியில் வைத்து கூறியிருந்தார், தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது என்று. ஆனால் இன்று தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டம் அற்ற நிலையிலிருக்கின்றோம். அரசியல் ரீதியாக பலமற்ற நிலையில் உள்ளோம். நாங்கள் இந்தியாவை நம்பியிருக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொறுத்தவரை கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதை இந்தியா கூட உணராமல் இருக்கின்றதா?அல்லது உணர்ந்துகொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் இன்று சீனா அகலக்கால் பதித்து வருகின்றது. அம்பாந்தோட்டை,கொழும்பு போன்ற பகுதிகளிலும் காலூன்றிய நிலையில் வடக்கு-கிழக்கிலும் காலூன்ற எத்தனிக்கின்றனர். வடக்கில் காலை வைத்துவிட்டார்கள். இந்தியா தனது பாதுகாப்பையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும்மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக மீட்சி பெறுவதற்கு உதவிய இந்தியா, தமிழ் மக்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு முழு அதிகாரத்தையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை மிக விரைவாக நடத்துதற்கு உறுதி செய்யவேண்டும்- என்றார்.