கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறையின் அடிப்படையில் அதன் பிரதிநிதிகள் முன்பாக இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழிகள் அகழ்வு ஊடாக பல மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது கடந்த காலத்தில் குற்றச்சாட்டப்பட்ட வகையிலே யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பல விடயங்களிற்கு சாட்சியமாக விளங்குகின்றது.
மனித உரிமை பேரவையில், மனித உரிமை உயர்தானிகராலும் இந்த யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களிற்கான சாட்சியங்களை பதிவு செய்கின்ற ஒரு பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த அகழ்வாராய்ச்சி என்பது மனித உரிமை உயர்தானிகர் அல்லது ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதிகள் முன்பாகவும் இந்த சாட்சியங்களிற்கான அலுவலகம் திறக்கப்பட்டு இதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய நிதி ஒதுக்கீட்டினையும் ஐ.நா செய்துள்ளது.
ஆகவே அவர்களையும் வைத்துக்கொண்டு இந்த அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் தோண்டியெடுக்கப்படும் மனித புதைகுழிகளின் விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய முடியும்.
குறிப்பாக கொக்குத் தொடுவாய் என்பது தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த இடம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்பது மட்டுமன்றி யுத்தத்திற்கு முன்னரே அங்குள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், கிராமங்கள் அழைக்கப்பட்டதும் என்று பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த விடயங்களை சர்வதேச பிரதிநிதிகள் மாத்திரமன்றி குறிப்பாக ஐ.நாவினுடைய மனித உரிமை உயர்தானிகருடைய அல்லது மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் அல்லது அலுவலர்கள் முன்னாலே இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.