இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விஜயம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் உற்றுநோக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் தொடர்பான ஒத்திவைப்பானது அசாதாரணமான திட்டமிடலை வெளிப்படுத்தியுள்ளது.

சீனா ஆய்வுக்கப்பலின் வருகையும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான வருகையும் அண்மைக்காலங்களில் உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியிருந்தன.

எனினும் இந்தியா இன்று பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் வெளிப்படுத்திய விடயம், இலங்கை மீதான இந்தியாவின் நகர்வுகள், திட்டமிடல்கள் தொடர்பில் அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளன.

எனினும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்திய இராணுவ கப்பல் இன்னும் இலங்கையிலேயே தரித்து நிற்கிறது.

மேலும், சீன மற்றும் இந்தியாவின் இலங்கை மீதான நோட்டமிடல்கள் அதிகரிக்கும் நேரத்தில் இலங்கையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் போது அவருக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறவுள்ளதான செய்திகள் சிலவும் வெளிவந்திருந்தன.