மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையாகயிருந்த இருதய சிகிச்சைப்பிரிவிற்கான இருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று(02.09.2023) அவரது மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி குறித்த இயந்திரத்தினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சரின் செயலாளரும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்று வேறுமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதனை பெறுவதற்கு பல்வேறு பிரயனத்தனங்கள் செய்து கொண்டுவரப்படாத நிலையில் இந்த இயந்திரத்தினை கொண்டுவர அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.