18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தமது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் தண்ட பணம் அறவிடப்படும் என்பது சட்டவிரோதம்.
ஏனெனில் இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானத்தைப் பெறுபவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களாக கருத முடியாது.
வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் வரி செலுத்த முடியாது அவர்களின் வருமானம் அதிகரிக்கும் போது வரி செலுத்த முடியும் பதிவு செய்யவில்லை என தண்டம் அறவிட முடியாது.
அது மட்டுமல்லாது 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்யா விட்டால் 50ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படும் என அறிவித்த அரசாங்கம் இவ்வளவு காலமும் வரி வருமானம் செலுத்தாதவர்களுக்கு என்ன தண்டம் என அறிவிக்கவில்லை.
ஆகவே இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்குவது நல்ல விடயம் ஆனால் பதிவு செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் என கூறுவது சட்ட விரோதம் என அவர் மேலும் தெரிவித்தார்.